பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. அமெசான் இராணியின் ஒட்டியாணம்


ஐரோப்பாவில் கருங்கடலுக்கு அருகிலுள்ள காகேசிய மலைகளின் அடிவாரத்தில் முற்காலத்தில் அமெசான்கள் என்று அழைக்கப்பெற்ற வீரப் பெண்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் ஆடவர்களின் உதவியில்லாமல் தாங்களே தனி ராஜ்ஜியங்கள் அமைத்துக் கொண்டு அவைகளைப் பாதுகாத்து வந்தார்கள். அமெசான் நாட்டில் ஆடவர்கள் வீட்டு வேலைகளைத்தாம் கவனித்துச் செய்து வந்தார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கவோ, போர் செய்யவோ முடியாதபடி, அமெசான் பெண்கள் அவர்களை இளவயதிலேயே தடுத்து வந்தார்கள். ஆண் குழந்தைகள் பிறந்தால், அமெசான்கள் அவைகளுடைய கைகளும் கால்களும் நன்றாக வளர்ச்சியடையாதபடி கட்டி வைத்திருந்தார்களாம்! அந்த நாட்டில் ஆட்சி செய்தது பெண்கள். போர் செய்தது பெண்கள். எல்லாப் பொதுக் காரியங்களையும் அவர்களே கவனித்து வந்தார்கள். இப்படி நெடுங்காலம் அவர்கள் ஆண்டு வந்ததுடன், அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளின் மீதும் படையெடுத்து வென்று, அவைகளையும் தங்கள் ராஜ்ஜியங்களோடு சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.


அந்தக் காலத்தில் அமெசான்கள் என்றால், ஆடவர்களுக்கு அச்சந்தான். அமெசான்கள் பித்தளையினால் செய்த விற்களை வைத்துக்கொண்டு போர் செய்வார்கள். அம்பு விடுவதில் அவர்களுக்கு இணையில்லை என்று பலரும் அவர்களைப் பாராட்டி வந்தார்கள். வீரம் மிக்க கிரேக்கர்கள் கூட உயர்ந்த வில் ஒன்றைக் கண்டால், அதை ‘அமெசான் வில்’ என்று சொல்லிப் பாராட்டுவார்கள். அமெசான்கள் குதிரையேற்றத்திலும் வல்லவர்கள். உலகிலேயே முதன் முதலாகப் போர்களில் அவர்களே குதிரைப் படைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/57&oldid=1074321" இலிருந்து மீள்விக்கப்பட்டது