பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(௬)

தொல்காப்பியம்



இவ்விரண்டினையுங் காலையே யோதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி யிவற்றையே கூறினார். வடவேங்கடந் தென்குமரி யிவையிரண்டு மகப்பாட்டெல்லையாயின? -என்னை? குமரியாற்றின் றெற்கு நாற்பத் தொன்பது நாடு கடல் கொண்டதாகலின், கிழக்கு மேற்குங் கடலெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாரா யினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய வென்றால் வடவேங்கடங் தென்குமரியென வேண்டுதலி னதனை விளங்கக் கூறினார். உலகமென்றது பலபொருளொரு சொல் லாகலி னீண்டாசிரியரை யுணர்த்திற்று; அவரையே யுலகங் கண்ணாக வுடைமையின். என்னை?

வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான

என மரபியலுட் கூறுதலின். அவ்வாசிரியராவார் அகத்தியனாரு மார்க்கண்டேயனாருந் தலைச் சங்கத்தாரு முதலியோர். உலகத்து உலகத் துடையவென விரிக்க. வழக்காவது சில சொற்பிறந்த வக்காலத்து இஃதறத்தை யுணர்த்திற்று இஃது பொருளையுணர்த்திற்று இஃதின்பத்தை யுணர்த்திற்று இஃதுவீட்டை யுணர்த்திற்று என்றுணர்விப்பது. செய்யுளாவது,

‘பாட்டுரை நூலே’யென்னுஞ் செய்யுளியல் சூத்திரத்தாற் கூறியவேழும். அறமுதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. முதலினென்றது முதலுகையினாலே — (எ-று).

எழுத்தென்றதியாதனை யெனின் கட்புலனாகா வுருவுங் கட்புலனாகிய வடிவுமுடையவாய் வேறுவேறு வகுத்துக் கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கியைந்து நிற்கு மோசையையாம். கடலொலி சங்கொலி முதலியவோசைகள் பொருளுணர்த்தாமையானு முற்கு ஈளை இலதை முதலியன பொருளுணர்த்தினவேனு மெழுத்தாகாமையானு மவை யீண்டுக் கொள்ளாராயினார். ஈண்டுருவென்றது மனனுணர்வாய் நிற்குங் கருத்துப் பொருளை. அதுசெறிப்பச் சேறலானுஞ் செறிப்ப வருதலானும், இடை யெறியப்படுதலானும் இன்ப துன்பத்தையாக்கலானும் உருவுமுருவுங் கூடிப்பிறத்தலானும் உந்தி முதலாகத் தோன்றி யெண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாந் தன்மையின்றிச் செவிக்கட்சென்றுறுமூறுடைமை யானும் விசும்பிற்பிறந்தியங்குவதோர் தன்மையுடைமையானுங் காற்றின் குணமாயதோருருவாய் வன்மை மென்மை யிடைமை கோடலானு முருவேயாயிற்று. இதனைக் காற்றின் குணமென்றலிவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின்குண மென்பாருமுளர். இவ்வுரு ‘உருவுரு வுருவாகி’ யெனவும் ‘உட்பெறுபுள்ளி யுருவாகும்மே’ யெனவுங் காட்சிப் பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனா