பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28
வள்ளியம்மை சரித்திரம்.

தன்கேள்வன் இல்லாச் சமயமவர் வந்திடினும்
நன்கே யுபசரித்தந் நண்பினரை—மென்பாவை
வேலையா ளர்களால் வேண்டுவசெய் விப்பள்
சாலஅவர் உள்மகிழத் தான். ௱௫௭

எத்தனைநாள் அன்னார் இருந்திடினுந் தன்வீட்டில்
புத்தியுளாள் அன்பே புரிந்துமிகச்—சித்தமகிழ்ந்
தோர்நாள் எனவே யுபசரிப்பள் நித்தமும்இப்
பார்மீ தெவர்க்குளதிப் பண்பு. ௱௫௮

பொன்னனையாள் கற்பும் புகழுஞ்செய் புண்ணியமும்
அன்னவர்கள் கண்டே யதிவியப்புற்—றென்னநம
தில்வாழ்வோர் வாழ்வோ இனிதாஞ் சிதம்பரத்தின்
நல்வாழ்வே வாழ்வென்பர் நன்கு. ௱௫௯

இம்மகள்மாண் பெல்லாம் இனியனவென் றுள்ளுவந்து
தம்மனைமார்க் கன்னார் போய்ச் சாற்றிடவே—அம்மகளிர்
தாங்கேட் டகமகிழ்ந்தித் தையலினைக் காணஇவள்
பாங்கே வருவார் பரிந்து. ௱௬௰

பொய்வடிவே யாமருங்குல் பூவைமார் போதலும்நன்
மெய்வடிவே யானாள் விழைந்தெதிர்போய்—வைவடிவேல்
கண்ணார் தமக்குக் கனிவாய்ப் பலமுகமன்
பண்ணார் மொழியால் பகர்ந்து. ௱௬௧

அன் னநடையாரை யழைத்துவந்தே யந்நடையில்
சின்னநடை யாள்நற் செழுமதுரம்—மன்னும்
கனிவகைசிற் றுண்டிகள்பால் கற்புடையன் னார்கள்
நனியருந்தச் செய்வாள் நயந்து. ௱௬௨