பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
துன்பத்தின் கற்பனை.

சிலர் துன்பங்களின் கற்பனைகளைக் கல்லாது , எப் பொழுதும் அஞ்ஞானத்தில் இருந்துகொண்டு நோயும் ஆசாபங்கமும் துக்கமுமாகிய சிட்சைகளை மேன் மேலும் அடைந்துகொண்டிருத்தல் கூடும். எவன் தன்னைச் சூழ்ந்திருக்கிற துன்பத்தினின்று நீங்கிக்கொள்ள விரும்புகிறானோ அவன் துன்பத்தின் கற்பனைகளைக் கற்றுக்கொள்வதற்கு விருப்பமுடை யவனாகவும் கடுமையான முயற்சி செய்யத் தயா ராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், கடுமை யான முயற்சியின்றி ஞானத்தையாவது சாந்தியை யாவது நிலையான சுகத்தையாவது ஒரு சிறிதும் அடைய முடியாது.

ஒரு மனிதன் ஓர் இருட்டறைக்குள் போய் அதன் கதவை அடைத்துக் கொண்டு உலகத்தில் ஒளியென்பதே யில்லை யென்று சொல்லலாம் ; ஆனால், ஒளி வெளியில் எங்கும் நிறைந்திருக்கிறது ; இருள் அவனுடைய சிறிய அறையுள் மாத்திரம் இருக்கிறது. அப்படியே, நீங்களும் மெய்ப்பொருளின் ஒளி உங்கள் மீது படாமல் மறைத்துக்கொள்ளலாம்; அல்லது உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிற வெறுப்பு, சுயநயம், பாவம் முதலிய மதில்களை இடித்துச் சர்வ வியாபகமான பேரொளியைக் காணற்குத் தொடங்கலாம்,

9