பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-3-


என்னும் மூன்றதிகாரங்களுக்கும் உரை இயற்றியுள்ளார்கள். கல்லாடர் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்ப தாகவும், சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதி யிருப்பதாகவும் தெரிகிறோம். அவ் வைந்துரைகளும் முறையே இளம்பூரணம், கல்லாடம், பேராசிரியம், நச்சினார்க்கினியம், சேனாவரையம் என வழங்குகின்றன.

இவ்வுரைகளில், சேனாவரையமும், நச்சினார்க்கினிய எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தனித்தனியே அச்சாகி வெளிவந்துள்ளன. நச்சினார்க்கினியப் பொருளதிகாரமும், போசிரியப் பொருளதிகாரமும் கலந்து அச்சாகி வெளிவந்துள்ளன. பேராசிரியச் சொல்லதிகாரம் கரந்தை தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிடப்பெற்று முடிந்து விரையில் வெளிவரும் நிலைமையில் இருக்கின்றது. இளம்பூரணம் எழுத்ததிகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பூவிருந்தவல்லிக் கன்னியப்ப முதலியாரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. அவ்வெழுத் ததிகாரத்தைப் பல ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தி யான் இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்துகின்றேன். இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியலும் புறத்திணையியலும் முன்னரே அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். சொல்லதிகாரமும் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களும் விரைவில் அச்சிட்டு வெளியிடப் பெறும்.

இளம்பூரணரே முதல் உரையாசிரியர், அவர் “உரையாசிரியர்” எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமை வாய்ந்தவர், அவர் மூன்று அதிகார உரைகளுள்ளும் எழுத்ததிகாரவுரை “எழுத்திற்கு இளம்பூரணம்” என்று யாவராலும் புகழப்பெற்றது. கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்பு நோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட் சொற்களையும் பிரித்தும் நிறுத்திப் படித்தற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். ஒவ்வோரிடத்தில் பாட வேறுபாடும், உரைவேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே [ ] இக்குறிகள் இட்டுள்ளேன்.

இவ் வெழுத்ததிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் 1920-ம் வருடத்தில் அச்சிடத் தொடங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல்கள் முன்னரே அச்சாக வெளிவந்துள்ளன. இஃது இப்பொழுது வெளி வருகின்றது. பொருளதிகார ஏனைய இயல்களும் சொல்லதிகாரமும் விரைவில் வெளிவரும்.

கோவிற்பட்டி,
1-6-1028.
வ. உ. சிதம்பரம் பிள்ளை.