பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம்

என்பது எண்ணிடைச் சொல். தருமர் பாடம் 'வகை தெரிவான் கண்ணே யுயர்வு'.

கருத்து. ஐம்புலன்களையும் நீத்தவன் வழியிலே உலகினர் நடப்பர்.

8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்

பொருள். நிறைமொழி மாந்தர் பெருமை-நிறைவுறும் சொற்களைச் சொல்லும் மாந்தரது பெருமையை, நிலத்து மறை மொழி காட்டி விடும்-உலகத்தின்கண் மறைந்து நிலவும் (மந்திர) மொழிகள் (கண்கூடாகக்) காட்டிவிடும்.

அகலம். நிறை என்பது வினைத்தொகை. அது நிறைந்த,நிறைகிற, நிறையும் என விரியும். மறை என்பதும் வினைத் தொகை. அதுவும் அவ்வாறே காலங்காட்டி விரியும். மறைத்து வைத்துப் போற்றுவதால், மந்திரத்தை மறைமொழி என்றார்.

கருத்து. துறவிகள் பெருமைக்கு அவர் உரைத்த மந்திரங்களே சான்று.

9. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது.

பொருள். குணம் என்னும் குன்று ஏறி நின்றார்-ஒழுக்கம் என்னும் மலையின் மீது ஏறி நின்றவர், வெகுளி கணமேயும் காத்தல் அரிது-சினத்தை(ஒரு) கணப்பொழுதேனும் தாங்கி நிற்றல் இன்று.

அகலம். 'ஒழுக்கம்-துறவிக்குரிய ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளக்கத்தைத் தருதலால், குன்றிற்கு உவமிக்கப் பெற்றது.