பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

பரணர்.

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞால முழுது நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவனெல் லாமளந்தா ரோர்ந்து.

இ-ள். மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால் ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - திருமாலும் குறளாய்ப் பிறந்து வளர்ந்து இரண்டு பெரிய அடிகளால் உலகமனைத்தையும் விரும்பி அளந்தான்; வாலறிவின் வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார் உள்ளுவ எல்லாம் ஓர்ந்து அளந்தார் - மெய்யறிவினையுடைய திருவள்ளுவரும் தம்மினின்றுந் தோன்றி அந்நிலை நிற்கின்ற வெண்பாக் குறளின் இரண்டு சிறிய அடிகளால் அவ்வுலக மனைத்தினுமுள்ளோரால் நினைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

உம்மை யிரண்டும், முறையே தேவரிற் பெரியோனாகியவென்றும், மனிதரிற் சிறியராய்க் காணப்பட்ட வென்றும் பொருள்பட நின்றன. உவமானத்திலே வளர்தலும் பெருமையும் சொல்லுதலால், உவமேயத்திலே அவற்றுக்கு முரணாகிய நிலைநிற்றலும் சிறுமையும் வருவிக்கப்பட்டன. மாலுக்குத் தானே குறளாதலும், பின்பு அந்நிலை நில்லாது வளர்தலும், பேரடிகளால் அளவுபட்ட உலகத்தை யளத்தலும், திருவள்ளுவருக்குத் தம்மினின்றுங் குறளை உண்டாக்குதலும், அது தன்னிலை நிற்றலும், அதன் சிற்றடிகளால் அளவுபடாத நினைப்பின் விடயங்களை அளத்தலும் சொல்லப்படுதலாலும், வேற்றுமை யறிக. நினைக்கப்பட்டனவெல்லாம் இதனகத்து அளவு செய்யப்பட்டமை சொல்லியபடி, (௬)

14