பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


218. உச்ச நீதிமன்றம் தொடர்பான குறித்த சில வகையங்கள் உயர் நீதிமன்றங்களுக்குப் பொருந்துறுதல் :

124 ஆம் உறுப்பின் (4), (5) ஆகிய கூறுகளின் வகையங்கள், உச்ச நீதிமன்றம் தொடர்பாகப் பொருந்துறுவன போன்றே, அவற்றிலுள்ள உச்ச நீதிமன்றம் என்னும் சுட்டுகைகளுக்கு மாற்றாக உயர் நீதிமன்றம் என்னும் சுட்டுகைகளைக் கொண்டு உயர் நீதிமன்றம் தொடர்பாகவும் பொருந்துறுவன ஆகும்.

219. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதி மொழி :

உயர் நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பெறும் ஒவ்வொருவரும், அவர் தம் பதவியை ஏற்பதற்கு முன்பு, மாநில ஆளுநரின் அல்லது அதன்பொருட்டு அவரால் அமர்த்தப்பெறும் ஒருவரின் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப் பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறையில் ஓர் ஆணைமொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்.

220. நிலையமர் நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதன்மீது வரையறை :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குப் பின்பு, ஓர் உயர் நீதிமன்றத்தில் நிலையமர் நீதிபதியாகப் பதவி வகித்த எவரும், உச்ச நீதிமன்றத்திலும் பிற உயர் நீதிமன்றங்களிலும் தவிர, இந்தியாவிலுள்ள வேறு நீதிமன்றம் எதிலும் அல்லது அதிகாரஅமைப்பு எதன் முன்பும் வழக்குரைஞராக வாதிடுதலோ செயலுறுதலோ ஆகாது.

விளக்கம்.- இந்த உறுப்பில், "உயர் நீதிமன்றம்” என்னும் சொற்றொடர் 1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு இருந்துவந்த, முதலாம் இணைப்புப்பட்டியலின் “ஆ" பகுதியில் குறித்துரைக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கான உயர் நீதிமன்றத்தை உள்ளடக்குவதில்லை.

221. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன :

(1) உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றின் நீதிபதிகளுக்கும் நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் வரையூதியங்கள் வழங்கப்படும்; அவ்வாறு அதன்பொருட்டு வகைசெய்யப்படும் வரையிலும், இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியங்கள் வழங்கப்பட்டு வரும்.

(2) நீதிபதி ஒவ்வொருவரும், நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தாலோ அதன் வழியாலோ தீர்மானிக்கப்படும் படித்தொகைகள், வாராமை விடுப்பும் ஓய்வூதியமும் பொறுத்த உரிமைகள் ஆகியவற்றிற்கு உரிமை கொண்டவர் ஆவார்; அவ்வாறு தீர்மானிக்கப்படும் வரையிலும் இரண்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள படித்தொகைகள், உரிமைகள் ஆகியவற்றிற்கு அவர் உரிமைகொண்டவராய் இருப்பார்:

வரம்புரையாக: நீதிபதி ஒருவரின் படித்தொகைகளோ வாராமை விடுப்பு அல்லது ஓய்வூதியம் பொறுத்த அவருடைய உரிமைகளோ அவர் அமர்த்தப்பெற்ற பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

222. நீதிபதி ஒருவரை ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுதல் :

(1) குடியரசுத்தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாய்வு செய்த பின்பு, ஓர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரைப் பிற உயர் நீதிமன்றம் எதற்கும் மாற்றலாம்.

(2) அவ்வாறு மாற்றப்பெற்றுள்ள அல்லது மாற்றப்பெறும் நீதிபதி ஒருவர், 1963ஆம் ஆண்டு அரசமைப்பு (பதினைந்தாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்குப் பின்பு பிற உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணிபுரிகிற காலத்தில் தமது வரையூதியத்துடன் சேர்த்து, நாடாளுமன்றம் சட்டத்தினால் தீர்மானிக்கும் சரியீட்டுப் படித்தொகைக்கும் அவ்வாறு தீர்மானிக்கப்படும் வரையில், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி குறித்திடும் சரியீட்டுப் படித்தொகைக்கும் உரிமைகொண்டவர் ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/109&oldid=1468744" இலிருந்து மீள்விக்கப்பட்டது