பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


வரம்புரையாக: வருவாய் பற்றிய அல்லது அதனை ஈட்டுவதற்கென இடப்பட்ட ஆணை அல்லது செய்யப்பட்ட செயல் பற்றிய பொருட்பாடு எதனையும் பொறுத்து, உயர் நீதிமன்றங்களில் எதுவும் முதலேற்பு அதிகாரம் செலுத்துவதற்கு இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இருந்துவந்த வரையறை எதுவும், அத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்கு இனிமேற்கொண்டு பொருந்துறுவதில்லை.

226. குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரம் :

(1) 32ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், III ஆம் பகுதியினால் வழங்கப்பெறும் உரிமைகளில் எதனையும் செயலுறுத்துவதற்காகவும், பிற நோக்கம் எதற்காகவும், உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும், தான் அதிகாரம் செலுத்துகிற ஆட்சிநிலவரைகள் எங்கணும் உள்ள எவருக்கும், அல்லது உரிய நேர்வுகளில் அந்த ஆட்சிநிலவரைகளுக்குள் உள்ள அரசாங்கம் எதுவும் உள்ளடங்கலாக அதிகாரஅமைப்பு எதற்கும், பணிப்புரைகளை, ஆணைகளை அல்லது ஆட்கொணர்விப்பு, செயலுறுத்து, தடையுறுத்து, தகுதிவினவு, நெறிமுறைக்கேட்பு ஆகியவற்றின் தன்மை கொண்ட நீதிப்பேராணைகளை அல்லது அவற்றில் எதனையும் பிறப்பிப்பதற்கு அதிகாரம் உடையது ஆகும்.

(2) அரசாங்கம் அல்லது அதிகாரஅமைப்பு எதற்கும் அல்லது எவர் ஒருவருக்கும் பணிப்புரைகள், ஆணைகள், அல்லது நீதிப்பேராணைகள் பிறப்பிப்பதற்கு (1) ஆம் கூறினால் வழங்கப்பட்ட அதிகாரத்தை, அதைச் செலுத்துவதற்கான வழக்குமூலம் முழுமையாகவோ பகுதியாகவோ எழுந்துள்ள நிலவரைகளில் அதிகாரம் செலுத்துகிற எந்த உயர் நீதிமன்றமும், அந்நிலவரைகளில் அத்தகைய அரசாங்கத்தின் அல்லது அதிகாரஅமைப்பின் அமர்கையிடம் அல்லது அத்தகையவரின் உறைவிடம் இல்லாதிருப்பினும், செலுத்தலாம்.

(3). (1) ஆம் கூறின்படியான ஒரு மனுவின் மீது அல்லது அது தொடர்பான நடவடிக்கை எதிலும், உறுத்துக்கட்டளை அல்லது நிறுத்திவைப்பு ஆணை வாயிலாகவோ வேறெந்த முறையிலோ தரப்பினர் எவருக்கும் எதிராக, இடைக்கால ஆணை ஒன்று—

(அ)அந்தத் தரப்பினருக்கு அந்த மனுவின் படிகளையும் அத்தகைய இடைக்கால ஆணை கோரும் வாதத்திற்கு ஆதரவாகவுள்ள ஆவணங்கள் அனைத்தின் படிகளையும் அளிக்காமலும்,
(ஆ) விசாரிக்கப்படும் வாய்ப்பினை அந்தத் தரப்பினருக்கு வழங்காமலும்

பிறப்பிக்கப்பட்டிருந்து, அதன்மேல் அந்த ஆணையை நீக்கம் செய்வதற்கு உயர் நீதிமன்றத்திடம் அந்தத் தரப்பினர் ஒரு விண்ணப்பம் செய்து, அந்த ஆணை யாருக்குச் சாதகமாகப் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ அந்தத் தரப்பினருக்கு அல்லது அந்தத் தரப்பினரின் வழக்குரைஞருக்கு அத்தகைய விண்ணப்பத்தின் ஒரு படியினையும் அளித்திருப்பாராயின், உயர் நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தினைப் பெற்ற தேதி அல்லது அத்தகைய விண்ணப்பத்தின் ஒரு படி அளிக்கப்பட்ட தேதி, இதில் எது பிந்தியதோ, அத்தேதியிலிருந்து இரண்டு வாரக் காலஅளவு முடிவடைவதற்கு முன்பு அல்லது அந்த காலஅளவின் கடைசி நாளன்று உயர் நீதிமன்றம் மூடப்பட்டிருக்குமாயின், உயர் நீதிமன்றம் அடுத்துத் திறக்கப்படுகிற நாள் முடிவடைவதற்கு முன்பு, அந்த விண்ணப்பத்தினை அந்நீதிமன்றம் தீர்வுசெய்தல் வேண்டும்; அந்த விண்ணப்பம் அவ்வாறு தீர்வு செய்யப்படவில்லையானால், அந்த இடைக்கால ஆணையானது, அந்தக் காலஅளவு கழிவுற்றதும் அல்லது, நேர்வுக்கேற்ப, மேற்சொன்ன அடுத்த நாள் முடிவுற்றதும், நீக்கமுற்றதாக ஆகிவிடும்.

(4) இந்த உறுப்பினால் ஓர் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பெறும் அதிகாரம், 32 ஆம் உறுப்பின் (2) ஆம் கூறின்படி உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பெற்றுள்ள அதிகாரத்தைத் திறக்குறைவு செய்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/111&oldid=1468759" இலிருந்து மீள்விக்கப்பட்டது