பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

[1][226அ. ★★]

227. அனைத்து நீதிமன்றங்களையும் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் :

(1) உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும், தான் அதிகாரம் செலுத்தி வருகிற ஆட்சி நிலவரைகள் எங்கணும் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அனைத்தின்மீதும் கண்காணிப்பு அதிகாரம் உடையது ஆகும்.

(2) மேலே கண்ட வகையத்தின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி உயர் நீதிமன்றம்

(அ)அத்தகைய நீதிமன்றங்களிலிருந்து விவர அறிக்கைகளைக் கேட்டுப் பெறலாம்;
(ஆ) அத்தகைய நீதிமன்றங்களின் நடைமுறையினையும் நடவடி உக்கைகளையும் ஒழுங்குறுத்துவதற்காகப் பொதுவியலான விதிகளை வகுத்தளிப்பதுடன், முறையமை படிவங்களையும் வகுத்தமைக்கலாம்; மற்றும்
(இ)அத்தகைய நீதிமன்றங்களின் அலுவலர்கள் வைத்துவர வேண்டிய புத்தகங்கள், பதிவுக்குறிப்புகள், கணக்குகள் ஆகியவற்றுக்கான முறையமை படிவங்களை வகுத்தமைக்கலாம்.

(3) உயர் நீதிமன்றம், அத்தகைய நீதிமன்றங்களின் கட்டளைக்காப்புநருக்கும், எழுத்தர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும், அங்குத் தொழிலாற்றுகிற வழக்காற்றுநர்கள், வழக்குரைஞர்கள், வாதுரைஞர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படவேண்டிய கட்டணவீத அட்டவணைகளையும் திட்டப்படுத்தலாம்:

வரம்புரையாக: (2) ஆம் கூறின்படி அல்லது (3) ஆம் கூறின்படி வகுக்கப்பட்ட விதிகள், வகுத்தமைக்கப்பட்ட முறையமை படிவங்கள், அல்லது திட்டப்படுத்தப்பட்ட அட்டவணைகள் எவையும், நிகழுறுகாலத்தில் செல்லாற்றலிலுள்ள சட்டத்தின் வகையங்களுக்கு முரணாக இருத்தல் ஆகாது; அவற்றுக்கு ஆளுநரின் முன் ஒப்பேற்பும் வேண்டுறுவதாகும்.

(4) இந்த உறுப்பிலுள்ள எதுவும், ஆயுதப்படைகள் தொடர்பான சட்டத்தாலோ அதன் வழியாலோ அமைக்கப்படும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதன்மீதும் கண்காணிப்பு அதிகாரங்களை ஓர் உயர் நீதிமன்றத்திற்கு வழங்குவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

228. குறித்தசில வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுதல் :

உயர் நீதிமன்றம், தனக்குக் கீழமைந்துள்ள ஒரு நீதிமன்றத்தில் முடிவுறாநிலையிலுள்ள ஒரு வழக்கில், இந்த அரசமைப்பின் பொருள்கோள் குறித்துச் செறிவான சட்டப்பிரச்சினை ஒன்று உள்ளது என்றும், அதனைத் தீர்வுசெய்தல் அந்த வழக்கினை முடிவு செய்வதற்கு அவசியமாகிறது என்றும் தெளிவுறக்காணுமாயின், தான் அந்த வழக்கினை எடுத்துக்கொண்டு,

(அ)அந்த வழக்கினையே முடிவு செய்து விடலாம்; அல்லது
(ஆ) மேற்சொன்ன சட்டப்பிரச்சினையைத் தீர்வுசெய்து, அந்த வழக்கு எந்த நீதிமன்றத்திடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதோ அந்த நீதிமன்றத்திற்கு, அத்தகைய பிரச்சினைமீதான தனது தீர்ப்புரையின் ஒருபடியுடன் சேர்த்து, அவ்வழக்கைத் திருப்பியனுப்பலாம்; மேற்சொன்ன நீதிமன்றம் அதனைப் பெற்றுக் கொண்டதன்மேல், அத்தகைய தீர்ப்புரைக்கு இணங்க அந்த வழக்கினை முடிவு செய்வதற்கு முற்படுதல் வேண்டும்.


  1. 1977 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் 13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு நீக்கறவு செய்யப்பட்டது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/112&oldid=1468763" இலிருந்து மீள்விக்கப்பட்டது