பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


[1][228அ. ★★]

229. உயர் நீதிமன்றங்களின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும் :

(1) உயர் நீதிமன்றத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் அந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாலோ, அவரால் பணிக்கப்பெறும் அந்நீதிமன்றத்தின் வேறொரு நீதிபதியாலோ அலுவலராலோ அமர்த்தப்பெறுவர்:

வரம்புரையாக: மாநில ஆளுநர், தாம் வகுக்கும் விதியின் வாயிலாக, அவ்விதியில் குறித்துரைக்கப்படும் நேர்வுகளில், ஏற்கெனவே அந்நீதிமன்றத்தைச் சேர்ந்தவர் அல்லாத எவரும் மாநிலத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைக் கலந்தாய்வு செய்தபின்பல்லாமல், அந்நீதிமன்றம் தொடர்பான பதவி எதற்கும் அமர்த்தப்பெறுதல் ஆகாது என வேண்டுறுத்தலாம்.

(2) மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, உயர் நீதிமன்றத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிவரைக்கட்டுகள், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாலோ அவரால் அதற்கென விதிகள் வகுப்பதற்கு அதிகாரமளிக்கப்பெற்றுள்ள அந்நீதிமன்றத்தின் வேறு நீதிபதி அல்லது அலுவலர் ஒருவராலோ வகுக்கப்படும் விதிகள் வகுத்துரைக்கின்றவாறு இருக்கும் :

வரம்புரையாக: இந்தக் கூறின்படி வகுக்கப்படும் விதிகளில், வரையூதியங்கள், படித்தொகைகள், விடுப்பு அல்லது ஓய்வூதியங்கள் பற்றிய விதிகளுக்கு மாநில ஆளுநரின் ஒப்பேற்பு வேண்டுறுவதாகும்.

(3) ஓர் உயர் நீதிமன்றத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கும் அவர்கள் பொறுத்தும் வழங்கத்தக்க வரையூதியங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் அனைத்தும் உள்ளிட்ட அதன் நிருவாகச் செலவுகள், மாநிலத் திரள்நிதியத்தின்மீது சார்த்தப்படும்; மேலும், அந்நீதிமன்றம் பெறும் கட்டணங்களும் பிற பணத்தொகைகளும் அந்நிதியத்தைச் சேர்வன ஆகும்.

230. உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கு அளாவச்செய்தல் :

(1) நாடாளுமன்றம், சட்டத்தினால், ஓர் உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை, ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதற்கும் அளாவச் செய்யலாம் அல்லது ஓர் உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதிலிருந்தும் நீக்கிவிடலாம்.

(2) ஓர் ஒன்றியத்து ஆட்சிநிலவரை தொடர்பாக ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றம் அதிகாரம் செலுத்தி வருகிறவிடத்து—

(அ)இந்த அரசமைப்பிலுள்ள எதுவும், அந்த அதிகாரவரம்பைக் கூட்டவோ குறுக்கவோ ஒழிக்கவோ அந்த மாநிலச் சட்டமன்றத்திற்கு அதிகாரமளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதல் ஆகாது; மற்றும்
(ஆ) 227 ஆம் உறுப்பில் ஆளுநர் என்று சுட்டப்பட்டிருப்பது, அந்த ஆட்சி நிலவரையிலுள்ள கீழமை நீதிமன்றங்களுக்கான விதிகள், முறையமைபடிவங்கள், அட்டவணைகள் இவற்றின் தொடர்பாக குடியரசுத்தலைவர் என்று சுட்டுவதாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

231. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவானதோர் உயர் நீதிமன்றத்தினை நிறுவுதல் :

(1) இந்த அத்தியாயத்தின் முந்தைய வகையங்களில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம், சட்டத்தினால் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்காக அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஒன்றியத்து ஆட்சி நிலவரை ஒன்றிற்குமாக, பொதுவானதோர் உயர் நீதிமன்றத்தினை நிறுவலாம்.


  1. 1977 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து மூன்றாம் திருத்தம்)ச் சட்டத்தின் 10 ஆம் பிரிவினால் (13-4-1978 முதல் செல்திறம் பெறுமாறு) நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/113&oldid=1468762" இலிருந்து மீள்விக்கப்பட்டது