பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


(2) அத்தகைய உயர் நீதிமன்றம் எதன் தொடர்பாகவும்—

(அ)217 ஆம் உறுப்பில் மாநில ஆளுநர் என்று சுட்டப்பட்டிருப்பது அந்த உயர் நீதிமன்றம் அதிகாரம் செலுத்துகிற மாநிலங்கள் அனைத்தின் ஆளுநர்களையும் சுட்டுவதாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆ) 227 ஆம் உறுப்பில் ஆளுநர் என்று சுட்டப்பட்டிருப்பது, கீழமை நீதிமன்றங்களுக்கான விதிகள், முறையமை படிவங்கள், அட்டவணைகள் இவற்றின் தொடர்பாக அந்தக் கீழமை நீதிமன்றங்கள் அமைந்துள்ள மாநில ஆளுநரைச் சுட்டுவதாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் (இ). 219, 229 ஆகிய உறுப்புகளில் மாநிலம் என்று சுட்டப்பட்டிருப்பது, உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்கையிடத்தைக் கொண்டுள்ள மாநிலத்தைச் சுட்டுவதாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: அத்தகைய தலைமை அமர்கையிடம் ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றில் இருக்குமாயின், 219, 229 ஆகிய உறுப்புகளில் ஆளுநர், அரசுப் பணியாளர் தேர்வாணையம், சட்டமன்றம், மாநிலத் திரள்நிதியம் என்று சுட்டப்பட்டிருப்பவை முறையே, குடியரசுத்தலைவர், ஒன்றியத்து அரசுப்பணியாளர் தேர்வாணையம், நாடாளுமன்றம், இந்தியத் திரள்நிதியம் என்று சுட்டுவனவாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

[1][232. ★★]

அத்தியாயம் VI
கீழமை நீதிமன்றங்கள்


233. மாவட்ட நீதிபதிகளை அமர்த்துதல் :

(1) மாநிலம் எதிலும் மாவட்ட நீதிபதிகளை அமர்த்துதல், அவர்களுக்குப் பணியிடங்களைக் குறித்தல், பதவிஉயர்வு அளித்தல் ஆகியவை அந்த மாநிலம் தொடர்பாக அதிகாரம் செலுத்திவருகிற உயர் நீதிமன்றத்தைக் கலந்தாய்ந்து அந்த மாநில ஆளுநரால் செய்யப்படுதல் வேண்டும்.

(2) ஒன்றியத்தின் அல்லது மாநிலத்தின் பணியில் ஏற்கெனவே இல்லாத எவரும், அவர் ஏழாண்டுகளுக்குக் குறையாமல் ஒரு வழக்குரைஞராக அல்லது வாதுரைஞராக இருந்திருந்து, அவரை ஒரு மாவட்ட நீதிபதியாக அமர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே, அவர் அவ்வாறு ஒரு மாவட்ட நீதிபதியாக அமர்த்தப்பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார்.

233அ. குறித்தசில மாவட்ட நீதிபதிகளின் அமர்த்துகை, அவர்கள் வழங்கிய தீர்ப்புரைகள் முதலியவற்றைச் செல்லத்தக்கன ஆக்குதல் :

நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் எவ்வாறிருப்பினும்—

(அ)233ஆம் உறுப்பின் அல்லது 235ஆம் உறுப்பின் வகையங்களுக்கு இணங்கியவாறு அல்லாமல், பிறவாறு 1966ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபதாம்திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு எச்சமயத்திலேனும்:—

(i) ஒரு மாநில நீதித் துறைப் பணியத்தில் ஏற்கெனவே உள்ள ஒருவரை அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாமல் ஒரு வழக்குரைஞராக அல்லது ஒரு வாதுரைஞராக இருந்துள்ள ஒருவரை அந்த மாநிலத்தின் ஒரு மாவட்ட நீதிபதியாக அமர்த்திய செயல் எதுவும்,
(ii) அத்தகைய எவருக்கும் ஒரு மாவட்ட நீதிபதியாகப் பணியிடம் குறித்தல், பதவி உயர்வு அளித்தல் அல்லது மாற்றல் செய்தல் எதுவும்

அத்தகைய அமர்த்துகை, பணியிடம் குறித்தல், பதவிஉயர்வு அல்லது மாற்றல், மேற்சொன்ன வகையங்களுக்கு இணங்கியவாறு செய்யப்படவில்லை என்ற காரணத்தால் மட்டுமே, அது சட்ட முரணானது அல்லது இல்லா நிலையது என்றோ அல்லது சட்டமுரணானதாக அல்லது இல்லாநிலையதாக எப்போதேனும் இருந்தது என்றோ கொள்ளப்படுதல் ஆகாது;


  1. 1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்)ச் சட்டத்தின் 16 ஆம் பிரிவினால் விட்டுவிடப்பட்டது.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/114&oldid=1468844" இலிருந்து மீள்விக்கப்பட்டது