பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


(ஆ) 233ஆம் உறுப்பின் அல்லது 235ஆம் உறுப்பின் வகையங்களுக்கு இணங்கியவாறு அல்லாமல், பிறவாறு மாநிலம் எதிலும் ஒரு மாவட்ட நீதிபதியாக அமர்த்தப்பெற்ற, பணியிடம் குறிக்கப்பெற்ற, பதவிஉயர்த்தப்பெற்ற, அல்லது மாற்றப்பெற்ற ஒருவரால் அல்லது அவர் முன்னிலையில் 1966ஆம் ஆண்டு அரசமைப்பு (இருபதாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு, செலுத்தப்பட்ட அதிகாரம், வழங்கப்பட்ட தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது தீர்ப்புத்தண்டனை எதுவும், அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் செய்யப்பட்ட பிறசெயல் அல்லது எடுக்கப்பட்ட பிற நடவடிக்கை எதுவும், அவருடைய அமர்த்துகை, பணியிடம் குறித்தல், பணியிட நியமனம், பதவிஉயர்வு, அல்லது மாற்றல் மேற்சொன்ன வகையங்களுக்கு இணங்கியவாறு செய்யப்படவில்லை என்ற காரணத்தால் மட்டுமே, அது சட்டமுரணானது அல்லது செல்லாநிலையது என்றோ அல்லது சட்டமுரணானதாக அல்லது செல்லாநிலையதாக எப்போதேனும் இருந்தது என்றோ கொள்ளப்படுதல் ஆகாது.

234. நீதித் துறைப் பணியத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிறரை எடுத்தல் :

மாநிலம் ஒன்றில் நீதித் துறைப் பணியத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிறர், அந்த மாநில ஆளுநரால், அந்த மாநிலத்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் அத்தகைய மாநிலம் தொடர்பாக அதிகாரம் செலுத்துகிற உயர் நீதிமன்றத்தையும் கலந்தாய்வு செய்த பின்பு அவரால் அதன்பொருட்டு வகுக்கப்படும் விதிகளுக்கு இணங்க அமர்த்தப்பெறுவர்.

235. கீழமை நீதிமன்றங்கள் மீதான கட்டாள்கை :

ஒரு மாநிலத்தின் நீதித் துறைப் பணியத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிப் பதவிக்குக் குறைவான பதவி எதனையும் வகித்து வருகிறவர்களின் பணியிடம் குறித்தல், பதவிஉயர்வு அளித்தல், அவர்களுக்கு விடுப்பு வழங்குதல் உள்ளடங்கலாக, மாவட்ட நீதிமன்றங்கள், அவற்றிற்குக் கீழமைந்த நீதிமன்றங்கள் இவற்றின் மீதான கட்டாள்கை உயர் நீதிமன்றத்திடம் உற்றமைந்திருக்கும்; ஆனால், இந்த உறுப்பிலுள்ள எதுவும், அத்தகையவர் எவரிடமிருந்தும், அவருடைய பணிவரைக்கட்டுகளை ஒழுங்குறுத்துகிற சட்டத்தின்படி அவருக்குற்ற மேன்முறையீட்டு உரிமை எதனையும் பறிப்பதாகவோ அத்தகைய சட்டத்தின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அவருடைய பணிவரைக்கட்டுகளுக்கு இணங்கியவாறு அல்லாமல் பிறவாறு அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரமளிப்பதாகவோ பொருள்கொள்ளப்படுதல் ஆகாது.

236. பொருள்கோள் :

இந்த அத்தியாயத்தில்—

(அ)"மாவட்ட நீதிபதி" _ என்னும் சொற்றொடர், மாநகர் உரிமையியல் நீதிமன்றம் ஒன்றன் நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, இணை மாவட்ட நீதிபதி, உதவி மாவட்ட நீதிபதி, சிறுவழக்கு நீதிமன்றம் ஒன்றன் தலைமை நீதிபதி, மாகாணத் தலைநகர்த் தலைமைக் குற்றவியல் நடுவர், கூடுதல் மாகாணத் தலைநகர்த் தலைமைக் குற்றவியல் நடுவர், அமர்வு நீதிபதி, கூடுதல் அமர்வு நீதிபதி, உதவி அமர்வு நீதிபதி ஆகியோரை உள்ளடக்கும்;
(ஆ)'நீதித் துறைப் பணியம்" என்னும் சொற்றொடர், மாவட்ட நீதிபதிப் பதவியிலும் மாவட்ட நீதிபதிப் பதவிக்குக் குறைவாக பிற உரிமையியல் நீதித் துறைப் பதவிகளிலும் அமர்த்தப்பெறுபவர்களை மட்டுமே கொண்ட ஒரு பணியம் என்று பொருள்படும்.

237. இந்த அத்தியாயத்தின் வகையங்கள் குறித்தசில வகுப்பு அல்லது வகுப்புகளைச் சேர்ந்த குற்றவியல் நடுவர்களுக்குப் பொருந்துறுதல் :

ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக இந்த அத்தியாயத்தின் மேலே கண்ட வகையங்களும் அவற்றின்படி வகுக்கப்பட்ட விதிகளும், மாநில நீதித் துறைப் பணியத்திற்கு அமர்த்தப்பெறுபவர்கள் தொடர்பாகப் பொருந்துறுவன போன்றே, அவை இதற்கெனக் குறித்திடும் தேதியிலிருந்து அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படும் விதிவிலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, அந்த மாநிலத்திலுள்ள எந்தவொரு வகுப்பையும் அல்லது வகுப்புகளையும் சேர்ந்த குற்றவியல் நடுவர்களுக்கும் பொருந்துறும் எனப் பணிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/115&oldid=1468847" இலிருந்து மீள்விக்கப்பட்டது