பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


மேலும் வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், சட்டமன்றப் பேரவையினால் அவ்வாறு இயற்றப்பட்ட சட்டத்துடன் சேர்க்கின்ற, அதனைத் திருத்துகின்ற, மாற்றுகின்ற அல்லது நீக்கறவு செய்கின்ற சட்டம் ஒன்று உள்ளடங்கலாக, அதே பொருட்பாடு பொறுத்த சட்டம் எதனையும் எச்சமயத்திலும் நாடாளுமன்றம் இயற்றுவதற்குத் தடையூறு ஆவதில்லை.

(4) துணைநிலை ஆளுநர், சட்டம் எதனாலுமோ அதன் வழியாகவோ, தம் உளத்தேர்வுப்படி செயலுற வேண்டுறுத்தப்பட்டுள்ள அளவுக்குத் தவிர, எந்தப் பொருட்பாடுகள் பொறுத்து, சட்டமன்றப் பேரவை சட்டங்கள் இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டிருக்கிறதோ, அந்த பொருட்பாடுகள் தொடர்பாக அவர் தம் பதவிப்பணிகளை ஆற்றுகையில், அவருக்கு உறுதுணையாக இருப்பதற்கும், தேர்வுரை வழங்குவதற்கும், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதவீதத்திற்கு மேற்படாமல், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஒன்று இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக: எந்தப் பொருட்பாட்டிலேனும் துணைநிலை ஆளுநருக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நேர்வில், துணைநிலை ஆளுநர், அதனை முடிபுசெய்வதற்காக குடியரசுத்தலைவருக்குச் சாட்டியனுப்பி, அதன்பேரில் குடியரசுத் தலைவரால் கொடுக்கப்பட்ட முடிபுக்கு இணங்க, செயலுறுதல் வேண்டும். மற்றும் அத்தகைய முடிவு எடுக்கப்படும் வரையில், தம் கருத்துப்படி உடனடியாக நடவடிக்கை எடுப்பதைத் தேவையானதாக ஆக்குகிற அளவுக்கு, பொருட்பாடு அவசரமானதாக இருக்கிற நேர்வில், தாம் தேவையானதெனக் கொள்கிறவாறு, அந்தப் பொருட்பாட்டில் அத்தகைய நடவடிக்கையினை எடுப்பது அல்லது அதில் அத்தகைய பணிப்புரையினைக் கொடுப்பது துணைநிலை ஆளுநருக்கு தகுதிறமுடையதாகும்.

(5) முதலமைச்சர், குடியரசுத்தலைவரால் பதவியில் அமர்த்தப்பெறுவார். மற்றும் பிற அமைச்சர்கள், முதலமைச்சரின் தேர்வுரையின்படி குடியரசுத்தலைவரால் பதவியில் அமர்த்தப்பெறுவர், மற்றும் அமைச்சர்கள், குடியரசுத்தலைவர் விழையுமளவும் பதவி வகிப்பர்.

(6) அமைச்சரவை, சட்டமன்றப் பேரவைக்கு கூட்டுப் பொறுப்புடையதாக இருக்கும்.

[1][(7) (அ)] நாடாளுமன்றம், சட்டத்தின் வாயிலாக, மேலே கண்ட கூறுகளில் அடங்கியுள்ள வகையங்களுக்குச் செல்திறம் கொடுப்பதற்கான அல்லது அதற்குத் துணையாக அமையும் மற்றும் அதற்கு சார்வுறுவான அல்லது விளைவுறுவான பொருட்பாடுகள் அனைத்திற்கும், வகையங்கள் செய்யலாம்.

[2][(ஆ) (அ) கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் ஒன்றில், இந்த அரசமைப்பைத் திருத்துகிற அல்லது திருத்தும் விளைவை ஏற்படுத்துகிற வகையம் எதுவும் அடங்கியிருந்த போதிலும், அந்தச் சட்டம், 368 ஆம் உறுப்பைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.]

(8) 239ஆ எனும் உறுப்பின் வகையங்கள், கூடியவரை, அவை முறையே, பாண்டிச்சேரி ஒன்றியத்து ஆட்சிநிலவரை, ஆளுகையர் மற்றும் சட்டமன்றம் தொடர்பாகப் பொருந்துறுவது போன்றே, தேசிய தலைநகர ஆட்சிநிலவரை, துணைநிலை ஆளுநர் மற்றும் சட்டமன்றப் பேரவை தொடர்பாகப் பொருந்துறும், மற்றும் அந்த உறுப்பில், "239 அ எனும் உறுப்பின் (1) ஆம் கூறு ”க்கான சுட்டுகை எதுவும், இந்த உறுப்பின் அல்லது, நேர்வுக்கேற்ப 239 அஆ எனும் உறுப்புக்கான ஒரு சுட்டுகையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.]


  1. 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபதாம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் 21-12-1991 முதல் செல்திறம் பெறுமாறு "(7)" என்பதற்கு மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபதாம் திருத்தம்) சட்டத்தின் 3ஆம் பிரிவினால் (21-12-1991 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/118&oldid=1468854" இலிருந்து மீள்விக்கப்பட்டது