பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


239அஆ. அரசமைப்பின் இயங்குமுறை செயலற்றுப்போகும் நேர்வில் ஏற்பாடுகள் :

குடியரசுத்தலைவர், துணைநிலை ஆளுநரிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெறுவதன் பேரில் அல்லது பிறவாறு

(அ) 239அஅ எனும் உறுப்பின் அல்லது அந்த உறுப்பினைப் பின்பற்றி இயற்றப்பட்ட சட்டம் எதனின் வகையங்களுக்கும் இணங்க, தேசிய தலைநகர ஆட்சி நிலவரையின் நிருவாகத்தை நடத்திச் செல்ல இயலாத ஒரு நிலைமை எழுந்துள்ளதென, அல்லது
(ஆ) தேசிய தலைநகர ஆட்சிநிலவரையினை முறையாக நிருவாகம் செய்வதற்கு அவ்வாறு செய்வது தேவையென அல்லது உகந்ததென

தெளிவுறக்காண்பாராயின், குடியரசுத்தலைவர், ஆணையின் வழி, 239 அஅ எனும் உறுப்பின் வகையம் எதனின் அல்லது அந்த உறுப்பினைப் பின்பற்றி இயற்றப்பட்ட சட்டம் எதனின் வகையங்கள் அனைத்தின் அல்லது அவற்றில் எதனின் செயற்பாட்டினையும், அந்தச்சட்டத்தில் குறித்துரைக்கப்படும் காலஅளவுக்கும், வரைக்கட்டுகளுக்கு உட்பட்டும், தற்காலிகமாக நிறுத்திவைத்து, தேசிய தலைநகர ஆட்சிநிலவரையினை 239 ஆம் உறுப்பின் மற்றும் 239 அஅ உறுப்பின் வகையங்களுக்கு இணங்க, நிருவாகம் செய்வதற்குத் தேவையென அல்லது தமக்கு உகந்ததெனத் தோன்றும் சார்வுறு மற்றும் விளைவுறு ஏற்பாடுகளைச் செய்யலாம்.]

239ஆ. சட்டமன்றக் கூட்டத்தொடர் இறுதிசெய்யப்பட்டுள்ள காலத்தின்போது அவசரச் சட்டங்களைச் சாற்றம் செய்வதற்கு ஆளுகையருக்குள்ள அதிகாரம் :

(1) பாண்டிச்சேரி எனும் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்நிலையிலுள்ள காலம் தவிர, வேறு எச்சமயத்திலேனும், அதன் ஆளுகையர் தாம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியதை அவசியமாக்கும் சூழ்நிலைகள் உள்ளன என்று தெளிவுறக்காண்பாராயின், அச்சூழ்நிலைகளுக்கேற்பத் தேவை என்று தாம் கருதும் அவசரச்சட்டங்களைச் சாற்றம் செய்யலாம்:

வரம்புரையாக: அத்தகைய அவசரச் சட்டம் எதனையும் இதற்கெனக் குடியரசுத்தலைவரிடம் இருந்து நெறியுறுத்தங்களைப் பெற்ற பின்பு அல்லாமல் அந்த ஆளுகையர் சாற்றம் செய்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: மேற்சொன்ன சட்டமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் போதும், 239அ உறுப்பின் (1)ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் எதன்படியும் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அது இயங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்போதும், ஆளுகையர், அவ்வாறு கலைக்கப்பட்டிருக்கும் அல்லது அது இயங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காலஅளவின்போது அவசரச்சட்டம் எதனையும் சாற்றம் செய்தல் ஆகாது.

(2) குடியரசுத்தலைவரின் நெறியுறுத்தங்களைத் தொடர்ந்து இந்த உறுப்பின்படி சாற்றம் செய்யப்படும் ஓர் அவசரச்சட்டம், 239அ உறுப்பின் (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் ஒன்றில் அடங்கியுள்ள வகையங்களுக்கு இணங்க, ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் சட்டமன்றத்தால் உரியவாறு இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டமாகக் கொள்ளப்படும் ஆனால், அத்தகைய அவசரச் சட்டம் ஒவ்வொன்றும்,—

(அ)ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றத்தின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அந்தச் சட்டமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்கள் கழிவுற்றவுடன் அல்லது அந்தக் காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே அதற்கு ஒப்பேற்பு அளிக்க மறுக்கும் ஒரு தீர்மானத்தை அச்சட்டமன்றம் நிறைவேற்றுமாயின், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் செயற்பாடு அற்றுப் போகும்; மேலும்
(ஆ) இதற்கெனக் குடியரசுத்தலைவரிடமிருந்து நெறியுறுத்தங்களைப் பெற்ற பின்பு, ஆளுகையரால், எச்சமயத்திலும் விலக்கிக் கொள்ளப்படலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/119&oldid=1468855" இலிருந்து மீள்விக்கப்பட்டது