பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


(3).239அ உறுப்பின் (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் ஒன்றில் அடங்கியுள்ள வகையங்களுக்கு இணங்க ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் எத்தகைய வகையம் செல்லுந்தன்மையற்றுப்போகுமோ அத்தகைய வகையம் எதனையும், இந்த உறுப்பின்படி சாற்றம் செய்யப்படும் ஓர் அவசரச்சட்டம் கொண்டிருப்பின், அந்த வகையத்தின் அளவிற்கு அது இல்லாநிலையது ஆகும்.

240. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்காக ஒழுங்குறுத்து நெறிமுறைகளை வகுப்பதற்கு குடியரசுத்தலைவருக்குள்ள அதிகாரம் :

(1) குடியரசுத்தலைவர்—

(அ) அந்தமான்-நிக்கோபார்த் தீவுகள்;
(ஆ) இலட்சத்தீவு;
(இ) தாத்ரா-நாகர்ஹவேலி;
(ஈ) தாமண் மற்றும் டையூ;
(உ) பாண்டிச்சேரி,

ஆகிய ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் அமைதி, முன்னேற்றம், நல்லாட்சி ஆகியவற்றுக்கான ஒழுங்குறுத்தும் விதிகளை வகுக்கலாம்:

வரம்புரையாக: பாண்டிச்சேரி எனும் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றமாக இயங்குவதற்கு 239அ உறுப்பின்படி குழுமம் எதுவும் உருவாக்கப்பட்டிருப்பின், அந்தச் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்திற்கெனக் குறிப்பிடப்படும் தேதிக்குப் பின்னர் குடியரசுத்தலைவர், அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் அமைதி, முன்னேற்றம், நல்லாட்சி ஆகியவற்றுக்கான ஒழுங்குறுத்தும்விதி எதனையும் வகுத்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: பாண்டிச்சேரி எனும் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றமாக இயங்கிவந்த குழுமம் கலைக்கப்பட்டிருக்கும்போதும், அந்தக் குழுமம் அத்தகைய சட்டமன்றமாக இயங்குவது 239அ உறுப்பின் (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் எதன்படியும் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்போதும், குடியரசுத்தலைவர், அவ்வாறு கலைக்கப்பட்டிருக்கும் அல்லது அது இயங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காலஅளவின்போது, அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் அமைதி, முன்னேற்றம், நல்லாட்சி ஆகியவற்றுக்கான ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்.

(2) அவ்வாறு வகுக்கப்பட்ட ஒழுங்குறுத்தும்விதி எதுவும், அப்போதைக்கு அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்துறும் நாடாளுமன்றச் சட்டம் அல்லது பிற சட்டம் எதனையும் நீக்கறவு செய்யலாம் அல்லது திருத்தம் செய்யலாம்; மேலும், அதைக் குடியரசுத்தலைவர் சாற்றம் செய்யும்போது அந்த ஆட்சிநிலவரைக்குப் பொருந்துறும் ஒரு நாடாளுமன்றச் சட்டத்தைப்போன்று, அதே செல்லாற்றலும் செல்திறமும் அது உடையது ஆகும்.

241. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கான உயர் நீதிமன்றங்கள் :

(1) நாடாளுமன்றம், சட்டத்தினால் ஓர் ஒன்றியத்து ஆட்சிநிலைவரைக்கென உயர் நீதிமன்றம் ஒன்றை அமைக்கலாம்; அல்லது அத்தகைய ஆட்சிநிலவரையிலுள்ள நீதிமன்றம் எதனையும், இந்த அரசமைப்பின் அனைத்து நோக்கங்களுக்காக அல்லது அவற்றில் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் ஓர் உயர்நீதிமன்றமாகும் என விளம்பலாம்.

(2) VI ஆம் பகுதியின் Vஆம் அத்தியாயத்தின் வகையங்கள் 214ஆம் உறுப்பில் குறிப்பிடப்பட்ட ஓர் உயர் நீதிமன்றத்திற்குப் பொருந்துறுவன போன்றே, (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட ஒவ்வோர் உயர்நீதிமன்றத்திற்கும், நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யும் மாற்றமைவுகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் உட்பட்டு, பொருந்துறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/120&oldid=1467638" இலிருந்து மீள்விக்கப்பட்டது