பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


(3) இந்தப் பகுதியிலுள்ள எதுவும்—

(அ) மாவட்ட நிலையிலான ஊராட்சிகள் தொடர்பாக, அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதன்படியும், டார்ஜிலிங் கோர்கா குன்று மன்றம் இருந்து வருகிற மேற்கு வங்க மாநிலத்திலுள்ள டார்ஜிலிங் மாவட்ட குன்றுப் பகுதிகளுக்குப் பொருந்தாது.
(ஆ) அந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட டார்ஜிலிங் கோர்கா குன்று மன்றத்தின் செயற்பணிகளையும் அதிகாரங்களையும் பாதிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.

[1][3(அ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காக பதவியிடங்களை ஒதுக்குவது தொடர்பாக 243(ஈ) உறுப்பிலுள்ள எதுவும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்குப் பொருந்துவதில்லை.]

(4) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்,—

(அ) (2) ஆம் கூறின் (அ) உட்கூறில் சுட்டப்பட்ட மாநிலச் சட்டமன்றம், அந்த அவையின் மொத்த உறுப்பினரில் பெரும் பான்மையோராலும், அந்த அவையில் வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையோராலும் அந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவை அந்தப்படிக்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்குமாயின், (1)ஆம் கூறில் சுட்டப்பட்ட வரையிடங்கள் நீங்கலாக, அந்த மாநிலத்திற்கு இந்தப் பகுதியைச் சட்டத்தின் வழி நீட்டிக்கலாம்;
(ஆ) நாடாளுமன்றம் சட்டத்தின் வழி, அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படும் விலக்குகளுக்கும், மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட பட்டியல் வரையிடங்களுக்கும் பழங்குடியினர் வரையிடங்களுக்கும் இந்தப் பகுதியின் வகையங்களை நீட்டிக்கலாம், மற்றும் அத்தகைய சட்டம் எதுவும், 368 ஆம் உறுப்பின் நோக்கங்களுக்காக, அரசமைப்பின் திருத்தமாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

243ங. நிலவுறும் சட்டங்களும், ஊராட்சிகளும் தொடர்ந்திருந்து வருதல் :

இந்தப் பகுதியில் உள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தப் பகுதியின் வகையங்களுக்கு முரணாக உள்ள 1992 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழுபத்து இரண்டாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்க நிலைக்கு ஒட்டி முன்பு, மாநிலத்தில் செல்லாற்றலிருந்த ஊராட்சிகள் தொடர்பான சட்டம் எதனின் வகையம் எதுவும், தகுதிறமுள்ள சட்டமன்றத்தினால் அல்லது பிற தகுதிறமுள்ள அதிகாரஅமைப்பால் திருத்தமோ அல்லது நீக்கறவோ செய்யப்படும்வரை அல்லது அத்தகைய தொடக்க நிலையிலிருந்து ஓராண்டு கழிவுறும்வரை, இவற்றில் எது முந்தியதோ அதுவரை செல்லாற்றலில் தொடர்ந்திருந்து வருதல் வேண்டும்:

வரம்புரையாக: அத்தகைய தொடக்க நிலையை ஒட்டி முன்பு இருந்து வரும் ஊராட்சிகள் அனைத்தும், அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையால் அல்லது சட்டமன்ற மேலவையை உடைய மாநிலம் ஒன்றைப் பொறுத்தவரை, அந்த மாநிலத்தின் சட்டமன்ற ஈரவைகளில் ஒவ்வொன்றாலும் அந்தப்படிக்குப் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் உடனடியாகக் கலைக்கப்பட்டாலன்றி, அவற்றின் காலஅளவு கழிவுறும் வரை தொடர்ந்திருந்து வருதல் வேண்டும்.

243ச. தேர்தல் தொடர்பான பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடுவதற்குத் தடை :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்,—

(அ)தேர்தல் தொகுதிகளை வரையறை செய்தல் தொடர்பாக, அல்லது அத்தகைய தேர்தல் தொகுதிகளுக்கு பதவியிடங்களைக் குறித்தொதுக்குவது தொடர்பாக, 243 ஓ கூறின்படி இயற்றப்பட்ட அல்லது இயற்றப்பட வேண்டியதாகப் புலப்படுகிற சட்டம் எதனின் செல்லுந்தன்மையானது, நீதிமன்றம் எதிலும் மறுத்து வாதிடப்படுதல்
ஆகாது
(ஆ) ஒரு மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம் எதனாலுமோ அல்லது அதன் வழியாகவோ வகை செய்யப்பட்டுள்ள அதிகாரஅமைப்பிற்கு மற்றும் அத்தகைய முறையில் முன்னிடப்பட்ட தேர்தல் மனுவின் மூலம் தவிர ஊராட்சி எதனின் தேர்தல் எதுவும் மறுத்து வாதிடப்படுதல் ஆகாது.


  1. 2000 ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து மூன்றாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (8-9-2000 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/129&oldid=1468949" இலிருந்து மீள்விக்கப்பட்டது