பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


243ண. நகராட்சிகளின் கட்டமைப்பு :

(1). (2) ஆம் கூறில் வகை செய்யப்பட்டவாறு தவிர, நகராட்சியில் உள்ள பதவியிடங்கள் அனைத்தும், நகராட்சிப் பகுதியிலுள்ள ஆட்சி நிலவரைத் தேர்தல் தொகுதிகளிலிருந்து நேரடித் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்படும் நபர்களால் நிரப்பப்படுதல் வேண்டும். மற்றும் இந்த நோக்கத்திற்காக நகராட்சிப் பகுதி ஒவ்வொன்றும், நகராட்சித் தொகுதி (Wards) என்றழைக்கப்படும் ஆட்சிநிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்படுதல் வேண்டும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வழி,

(அ) (i) நகராட்சி நிருவாகத்தில் சிறந்த தனியறிவு அல்லது பட்டறிவு பெற்றிருக்கிறவர்களுக்கு,

(ii) நகராட்சிப் பகுதி முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை அடக்கியிருக்கிற தேர்தல் தொகுதிகளைச் சார்பாற்றம் செய்கிற மக்களவை உறுப்பினர்களுக்கும் மாநிலச் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களுக்கும்,
(iii) நகராட்சிப் பகுதிக்குள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் மாநிலச் சட்டமன்றமேலவை உறுப்பினர்களுக்கும்,
(iv) 243த உறுப்பின் (5)ஆம் கூ கூறின்படி அமைக்கப்பட்ட குழுக்களின் தலைமையர்களுக்கு,

நகராட்சியில் சார்பாற்றம் செய்வதற்கு வகை செய்யலாம்:

வரம்புரையாக: (i)ஆம் பத்தியில் சுட்டப்பட்டவர்களுக்கு, நகராட்சிக் கூட்டங்களில் வாக்களிப்பதற்கு உரிமை இல்லை;

(ஆ) நகராட்சித் தலைமையர் தேர்தல் முறைக்கு வகை செய்யலாம்.

243த. நகராட்சித் தொகுதிக் குழுக்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் அவற்றின் கட்டமைப்பு :

(1) மூன்று இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற நகராட்சியின் ஆட்சி நிலவரைப்பகுதிக்குள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சித் தொகுதிகளைக் கொண்டிருக்கிற நகராட்சித் தொகுதிக் குழுக்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வழி__

(அ) நகராட்சித் தொகுதிக் குழுவின் கட்டமைப்பு மற்றும் ஆட்சி நிலவரை வரையிடம்,
(ஆ) நகராட்சித் தொகுதிக் குழுவிலுள்ள பதவியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய முறை

குறித்து வகை செய்யலாம்.

(3) நகராட்சித் தொகுதிக்குழுவின் ஆட்சி நிலவரைப் பரப்பிடத்திற்குள் ஒரு நகராட்சித் தொகுதியைச் சார்பாற்றம் செய்கிற நகராட்சி உறுப்பினர் ஒருவர், அந்தக் குழுவின் உறுப்பினராக இருப்பார்.

(4) நகராட்சித் தொகுதிக் குழுவானது,—

(அ) ஒரு நகராட்சித் தொகுதியைக் கொண்டிருக்குமிடத்து, நகராட்சியில் அந்தத் தொகுதியைச் சார்பாற்றம் செய்கிற உறுப்பினர்; அல்லது
(ஆ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சித் தொகுதிகளைக் கொண்டிருக்குமிடத்து, நகராட்சித் தொகுதிக்குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நகராட்சியில் அந்த நகராட்சித் தொகுதிகளைச் சார்பாற்றம் செய்கிற உறுப்பினர்களில் ஒருவர்

குழுவின் தலைமையராக இருப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/131&oldid=1468952" இலிருந்து மீள்விக்கப்பட்டது