பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


(5) நகராட்சித் தொகுதிக் குழுக்களுக்குக் கூடுதலாக குழுக்களை அமைப்பதற்கான ஏற்பாடு எதனையும் செய்வதிலிருந்து இந்த உறுப்பிலுள்ள எதுவும் மாநில சட்டமன்றத்திற்குத் தடையூறு செய்வதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

243(ந). பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் :

(1) ஒவ்வொரு நகராட்சியிலும், பட்டியலில் கண்ட சாதியினருக்காகவும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காகவும் பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும், அந்த நகராட்சிப் பகுதியில் உள்ள பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் அந்த நகராட்சிப் பகுதியில் உள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் மக்கள் தொகைக்கும் இடையிலான வீத அளவானது, கூடுமானவரையில், அந்த வரையிடத்தில் உள்ள மக்கள் தொகைக்கும் அந்த நகராட்சியில் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான அதே வீத அளவில் இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய பதவியிடங்கள் நகராட்சி ஒன்றில் உள்ள வெவ்வேறு தேர்தல் தொகுதிகளுக்காக சுழற்சி முறையில் பகிர்ந்தொதுக்கப்படலாம்.

(2). (1) ஆம் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பதயிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் பட்டியலில் கண்ட சாதியிகளை அல்லது, நேர்வுக்கேற்ப பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சார்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

(3) ஒவ்வொரு நகராட்சியிலும், நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய (பட்டியலில் கண்ட சாதிகளை மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடிகளைச் சார்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக) பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல், பெண்களுக்காக ஒதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் அந்தப் பதவியிடங்கள், நகராட்சியிலுள்ள பல்வேறுபட்ட தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் குறித்தொதுக்கப்படலாம்.

(4) நகராட்சியிலுள்ள தலைமையர்களின் பதவியிடங்கள் பட்டியலில் கண்ட சாதியினருக்கும், பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும், பெண்களுக்கும் இடையே மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வழி வகைசெய்யலாகும் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

(5) (1) மற்றும் (2) ஆம் கூறுகளின்படியான பதவியிடங்களின் ஒதுக்கீடு செய்தல் மற்றும் (4) ஆம் கூறின்படி (பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை அல்லாத பிற) தலைமையர்களின் பதவிகளுக்கான ஒதுக்கீடு செய்தல், 334ஆம் உறுப்பில் குறித்துரைக்கப்பட்ட காலஅளவு கழிவுறுவதன் பேரில் செல்திறம் அற்றுப் போகும்.

(6) இந்தப் பகுதியிலுள்ள எதுவும், குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு சார்பாக நகராட்சி எதிலும் பதவியிடங்களை அல்லது நகராட்சிகளில் தலைமையர்களின் பதவிகளை ஒதுக்கீடு செய்வதற்காக மாநில சட்டமன்றம் வகை எதனையும் செய்வதற்குத் தடையூறு ஆவதில்லை.

243ப. நகராட்சிகளின் காலஅளவு முதலியன :

(1) ஒவ்வொரு நகராட்சியும், அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனின்படியும் முன்னதாகவே கலைக்கப்பட்டலான்றி, அதன் முதல் கூட்டத்திற்காகக் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்திருந்துவரும் மற்றும் அதற்கு மேலும் இருத்தலாகாது.

வரம்புரையாக: கலைக்கப்படுவதற்கு முன்பு, ஒரு நகராட்சிக்குக் கேட்கப்படுவதற்கு ஒரு தகுமான வாய்ப்பு அளிக்கப்படுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/132&oldid=1468992" இலிருந்து மீள்விக்கப்பட்டது