பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


வரம்புரையாக: குடியரசுத் தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக, அந்த அறிவிக்கையில் அவர் குறித்துரைக்கலாகும் விலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதற்கும் அல்லது அதன்பகுதிக்கு, இந்தப் பகுதியின் வகையங்கள் பொருந்துதல் வேண்டும் என்று பணிக்கலாம்.

243வஇ. இந்தப் பகுதி குறித்தசில வரையிடங்களுக்குப் பொருந்தாது :

(1) இந்தப் பகுதியிலுள்ள எதுவும், 244 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறில் சுட்டப்பட்ட பட்டியல் வரையிடங்களுக்கும், (2)ஆம் கூறில் சுட்டப்பட்ட பழங்குடியினர் வரையிடங்களுக்கும் பொருந்தாது.

(2) இந்தப் பகுதியிலுள்ள எதுவும், மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் குன்று வரையிடங்களுக்காக, அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டத்தின்படி அமைக்கப்பட்ட டார்ஜிலிங் கோர்கா குன்று மன்றத்தின் அலுவற்பணிகளையும், அதிகாரங்களையும் பாதிப்பதாகப் பொருள்கொள்ளப்படுதலாகாது.

(3) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம், சட்டத்தினால், அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படலாகும் விலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, (1)ஆம் கூறில் சுட்டப்பட்ட பட்டியல் வரையிடங்களுக்கும், பழங்குடியினர் வரையிடங்களுக்கும், இந்தப் பகுதியின் வகையங்களை நீட்டிக்கலாம், மேலும் அந்தச் சட்டம் எதுவும், 368ஆம் உறுப்பின் நோக்கங்களுக்காக, இந்த அரசமைப்பின் ஒரு திருத்தமாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

243வஈ. மாவட்டத் திட்டக் குழு :

(1) ஒரு மாவட்டத்தில் ஊராட்சிகளாலும் நகராட்சிகளாலும் தயாரிக்கப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து, அந்த மாவட்டம் முழுமைக்கும் மேம்பாட்டு வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக, மாவட்ட அளவில் ஒரு மாவட்ட திட்டக் குழு, ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டு இருந்துவரும்.

(2) ஒரு மாநிலச் சட்டமன்றம், சட்டத்தினால் பின்வருவன குறித்து வகை செய்யலாம்.

(அ) மாவட்டத் திட்டக் குழுக்களை அமைத்தல்;
(ஆ) அந்தக் குழுக்களில் பதவியிடங்கள் நிரப்பப்படவேண்டிய முறை:

வரம்புரையாக: அந்தக் குழுவின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் நான்குப் பங்கிற்குக் குறையாதவர்கள், மாவட்ட அளவில் ஊராட்சியின் மற்றும் மாவட்டத்தில் நகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும் அவர்களுக்கிடையேயிருந்தும், மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளிலுள்ள மக்கள் தொகைக்கும் நகரப் பகுதிகளிலுள்ள மக்கள் தொகைக்கும் இடையேயுள்ள விகிதப்படியான வீத அளவில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்;
(இ)அத்தகைய குழுக்களுக்குக் குறித்தளிக்கப்படலாகும் மாவட்டத் திட்டம் தொடர்பான செயற்பணிகள்;
(ஈ) அத்தகைய குழுக்களின் தலைமையர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய முறை.

(3) மாவட்டத் திட்டக்குழு ஒவ்வொன்றும், மேம்பாட்டு வரைவுத்திட்டத்தைத் தயாரிக்கையில்.

(அ).

(i) இடஞ்சார்ந்த திட்டம், நீரைப் பகிர்ந்து கொள்ளுதல், பிற இயற்பியல் மற்றும் இயற்கை வளஆதாரங்கள், கட்டமைப்பின் ஒருங்கிணைந்த மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளடங்கலாக, ஊராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் இடையே உள்ள பொது நலன் குறித்த பொருட்பாடுகள்,
(ii) நிதிசார்ந்ததான அல்லது பிறவாறாகக் கிடைக்கத்தக்க வளஆதாரங்களின் அளவு மற்றும் வகை,

ஆகியவற்றைக் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/136&oldid=1468998" இலிருந்து மீள்விக்கப்பட்டது