பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


(ஆ) ஆளுநர், ஆணை வாயிலாகக் குறித்துரைக்கலாகும் நிறுவனங்களையும் அமைவனங்களையும் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

(4) மாவட்டத் திட்டக்குழு ஒவ்வொன்றின் தலைமையரும், அந்தக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறான மேம்பாட்டுத் திட்டத்தை மாநில அரசுக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும்.

243வஉ. பெருநகர் திட்டத்திற்கான குழு :

(1) பெருநகர்ப் பகுதி முழுமைக்கும் மேம்பாட்டு வரைவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு, பெருநகர்த் திட்டக்குழு ஒன்று, பெருநகர்ப் பகுதி ஒவ்வொன்றுக்கும் அமைக்கப்பட்டு இருந்துவரும்.

(2) மாநிலச் சட்டமன்றம், சட்டத்தின் வயிலாக பின்வருவன குறித்து வகை செய்யலாம்.

(அ) பெருநகர்த் திட்டக் குழுக்களை அமைத்தல்;
(ஆ) அந்தக் குழுக்களில் பதவியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய முறை:
வரம்புரையாக: அந்தக் குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெருநகர்ப் பகுதியில் நகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாலும் அவர்களுக்கிடையேயிருந்தும், ஊராட்சிகளின் தலைமையர்களாலும் அவர்களுக்கிடையேயிருந்தும், அந்தப் பகுதியில் நகராட்சிகளின் மற்றும் ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கும் இடையே உள்ள விகிதப்படியான வீத அளவில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்;
(இ)அந்தக் குழுக்களுக்குக் குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளை ஆற்றுவதற்காக, அந்தக் குழுக்களில், இந்திய அரசு மற்றும் மாநில அரசு மற்றும் தேவையென கருதலாகும், அமைவனங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பாற்றம் செய்தல்;
(ஈ) அந்தக் குழுக்களுக்குக் குறித்தளிக்கப்படலாகும் பெருநகர்ப் பகுதிக்குத் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் தொடர்பான செயற்பணிகள்;
(உ) அந்தக் குழுக்களின் தலைமையர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய முறை.

(3) பெருநகர்த் திட்டக் குழு ஒவ்வொன்றும், மேம்பாட்டு வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கையில்,—

(அ)

(i)பெருநகர்ப் பகுதிகளிலுள்ள நகராட்சிகளாலும் ஊராட்சிகளாலும் தயாரிக்கப்பட்ட திட்டங்களையும்;
(ii)ஒருங்கிணைந்த அந்தப் பகுதியின் இடஞ்சார்ந்த திட்டம், நீரைப் பகிர்ந்து கொள்ளுதல், பிற இயற்பியல் மற்றும் இயற்கை வளஆதாரங்கள், கட்டமைப்பின் ஒருங்கிணைந்த மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளடங்கலாக, நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடையே உள்ள பொது நலன் குறித்த பொருட்பாடுகள்;
(iii)இந்திய அரசால் மற்றும் மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த நோக்கங்கள் மற்றும் முந்துரிமைகள்;
(iv) இந்திய அரசின் மற்றும் மாநில அரசின் முகவாண்மைகளால் பெருநகர்ப் பகுதியில் செய்யப்படக்கூடிய முதலீடுகளின் அளவு மற்றும் தன்மை, மற்றும் கிடைக்கத்தக்க நிதி சார்ந்ததான அல்லது பிறவாறான வளஆதாரங்கள் ஆகியவற்றைக் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்;

(ஆ) ஆளுநர், ஆணை வாயிலாகக் குறித்துரைக்கலாகும் நிறுவனங்கள் மற்றும் அமைவனங்களைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/137&oldid=1469003" இலிருந்து மீள்விக்கப்பட்டது