பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


நிதி பற்றிய பல்திற வகையங்கள்


282. ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அதன் வருவாய்களிலிருந்து செய்வதாகும் செலவுகள் :

ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம், பொது நோக்கம் எதற்காகவும், அந்நோக்கம் நாடாளுமன்றம் அல்லது அந்த மாநிலச் சட்டமன்றச் சட்டங்கள் இயற்றுவதற்கு உரியதொன்றாக இல்லாதபோதிலும், மானியங்கள் எவற்றையும் வழங்கலாம்.

283. திரள் நிதியங்கள் எதிரதாக்காப்பு நிதியங்கள், அரசுப் பொதுக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் முதலியன :

(1) இந்தியத் திரள்நிதியம், இந்திய எதிரதாக்காப்பு நிதியம் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருப்பதும், அந்நிதியங்களில் பணத்தொகைகளைச் செலுத்துவதும், அவற்றிலிருந்து பணத்தொகைகளைத் திரும்ப எடுப்பதும், இந்திய அரசாங்கத்தால் அல்லது அதன் சார்பாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு அந்நிதியங்களில் வரவுவைக்கப்பட்டவை அல்லாத பிற பொதுப் பணத்தொகைகளைக் கைப்பொறுப்பில் வைத்திருப்பதும், அவற்றை இந்திய அரசுப் பொதுக் கணக்கில் செலுத்துவதும் இந்தக் கணக்கிலிருந்த பணத் தொகைகளைத் திரும்ப எடுப்பதும் மேற்சொன்ன பொருட்பாடுகளுக்குத் தொடர்பான அல்லது அவற்றிற்குத் துணைமையான பிற பொருட்பாடுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தினால் ஒழுங்குறுத்தப்படும்; அதன் பொருட்டு அவ்வாறு வகைசெய்யப்படும் வரை, குடியரசுத்தலைவர் செய்யும் விதிகளின் வழி அவை ஒழுங்குறுத்தப்படும்.

(2) ஒரு மாநிலத்தின் திரள்நிதியம், ஒரு மாநிலத்தின் எதிரதாக்காப்பு நிதியம் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருப்பதும், அந்நிதியங்களில் பணத்தொகைகளைச் செலுத்துவதும், அவற்றிலிருந்து பணத்தொகைகளைத் திரும்ப எடுப்பதும், அந்த மாநில அரசாங்கத்தால் அல்லது அதன் சார்பாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு அந்நிதியங்களில் வரவுவைக்கப்பட்டவை அல்லாத பிற பொதுப் பணத்தொகைகளைக் கைப்பொறுப்பில் வைத்திருப்பதும், அவற்றை மாநில அரசுப் பொதுக் கணக்கில் செலுத்துவதும், அந்தக் கணக்கிலிருந்து பணத்தொகைகளைத் திரும்ப எடுப்பதும், மேற்சொன்ன பொருட்பாடுகளுக்குத் தொடர்பான அல்லது அவற்றிற்குத் துணைமையான பிற பொருட்பாடுகள் அனைத்தும் அந்த மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தினால் ஒழுங்குறுத்தப்படும்; அதன்பொருட்டு அவ்வாறு வகை செய்யப்படும் வரையில், அந்த மாநிலத்தின் ஆளுநர் செய்யும் விதிகளின்வழி அவை ஒழுங்குறுத்தப்படும்.

284. அரசுப் பணியாளர்களாலும் நீதிமன்றங்களாலும் பெற்றுக்கொள்ளப்படும் வழக்காளிகளின் வைப்பீடுகள் பிற பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் :

(அ)இந்திய அரசாங்கத்தால் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒரு மாநில அரசாங்கத்தால் திரட்டப்பட்ட அல்லது பெறப்பட்ட வருவாய்கள் அல்லது பொதுப் பணத்தொகைகள் அல்லாத வகையில் ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவற்பாடுகள் தொடர்பாக வேலையில் அமர்த்தப்பெற்றுள்ள அலுவலர் எவராலும் அத்தகைய அலுவலர் என்ற முறையில் அவரால் பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அவரிடம் வைப்பீடு செய்யப்பட்ட, அல்லது
(ஆ) வழக்கு, பொருட்பாடு அல்லது கணக்கு ஒன்றில் அல்லது நபர்களின் பேரில் வாவுவைக்கப்படுவதற்காக இந்திய ஆட்சிநிலவரைக்குள் உள்ள ஒரு நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அதனிடம் வைப்பீடுசெய்யப்பட்ட

பணத்தொகைகள் அனைத்தும், இந்திய அரசுப் பொதுக் கணக்கில் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் அரசுப் பொதுக் கணக்கில் செலுத்தப்படுதல் வேன்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/153&oldid=1468631" இலிருந்து மீள்விக்கப்பட்டது