பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


(5) குடியரசுத்தலைவரால் அல்லது மாநிலம் ஒன்றின் ஆளுநரால் (3)ஆம் கூறுக்கான வரம்புரையின்படி செய்யப்பட்ட ஒழுங்குறுத்தும் விதிகள் அனைத்தும், அவை செய்யப்பட்ட பின்பு பதினான்கு நாட்களுக்குக் குறையாமல், கூடுமான விரைவில், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலச் சட்டமன்ற அவையின் அல்லது ஒவ்வோர் அவையின் முன்பும் வைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அந்த ஒழுங்குறுத்தும் விதிகள், அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தின் ஈரவைகளும் அல்லது அந்த மாநிலச் சட்டமன்றத்தின் அவை அல்லது ஈரவைகளும் நீக்கறவு அல்லது திருத்தம் வாயிலாகச் செய்யும் மாற்றமைவுகளுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

321. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செயற்பணிகளை விரிவாக்குவதற்கான அதிகாரம் : நாடாளுமன்றத்தால் அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலம் ஒன்றின் சட்ட மன்றத்தால் இயற்றப்படும் ஒரு சட்டம், ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் பணியங்களைப் பொறுத்தும், உள்ளாட்சி அதிகாரஅமைப்பு அல்லது சட்டத்தினால் அமைக்கப்பட்ட கூட்டுருமக்குழுமம் ஒன்றின் அல்லது அரசு நிறுவனம் ஒன்றின் பணியங்களைப் பொறுத்துங்கூட, ஒன்றியத்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது மாநிலத்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூடுதலாகச் செயற்பணிகளை ஆற்றுவதற்கு வகைசெய்யலாம்.

322. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செலவுகள் :

ஒன்றியத்து அல்லது மாநிலம் ஒன்றின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களுக்கு அல்லது பணியாளர் தொகுதிக்கு அல்லது அவர்கள் தொடர்பாக வழங்கப்படும் வரையூதியங்கள், படித்தொகைகள், ஓய்வூதியங்கள் உள்ளடங்கலான, அவ்வாணையத்தின் செலவுகள், இந்தியத் திரள் நிதியத்தின் மீது அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத் திரள் நிதியத்தின்மீது சார்த்தப்படும்.

323. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் அறிக்கைகள்:

(1) ஒன்றியத்து ஆணையம் செய்த பணியைப்பற்றிய ஓர் அறிக்கையை ஆண்டுதோறும் குடியரசுத்தலைவரிடம் முன்னிடுவது அந்த ஆணையத்தின் கடமை ஆகும்; மேலும், அந்த அறிக்கையைப் பெற்றதன்மேல், குடியரசுத்தலைவர், அதன் ஒரு படியினை, ஆணையத்தின் தேர்வுரை ஏற்றுக்கொள்ளப்படாத நேர்வுகள், எவையேனுமிருப்பின், அந்நேர்வுகளில், அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணங்களை விளக்கும் விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்கும்படி செய்வார்.

(2) மாநிலம் ஒன்றின் ஆணையம் செய்த பணியைப் பற்றிய ஓர் அறிக்கையை ஆண்டுதோறும் அந்த மாநிலத்தின் ஆளுநரிடம் முன்னிடுவது அந்த ஆணையத்தின் கடமை ஆகும்; மேலும், ஒரு கூட்டு ஆணையம் எந்த மாநிலங்களின் தேவைகளை நிறைவுறுத்தும் பொருட்டுப் பணிபுரிகிறதோ அந்த மாநிலங்கள் ஒவ்வொன்றின் ஆளுநரிடமும், அந்த மாநிலம் தொடர்பாக அந்த ஆணையம் செய்த பணியைப் பற்றிய ஓர் அறிக்கையை ஆண்டுதோறும் முன்னிடுவது அந்த ஆணையத்தின் கடமை ஆகும்; அந்நேர்வுகளில் எதிலும், ஆளுநர், அந்த அறிக்கையைப் பெற்றதன் பின்பு, அதன் ஒரு படியினை, ஆணையத்தின் தேர்வுரை ஏற்றுக்கொள்ளப்படாத நேர்வுகள், எவையேனுமிருப்பின், அந்நேர்வுகளில், அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படாததற்கான காரணங்களை விளக்கும் விவரக்குறிப்புடன் சேர்த்து, அந்த மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்கும்படி செய்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/171&oldid=1468970" இலிருந்து மீள்விக்கப்பட்டது