பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


பகுதி XIV அ
தீர்ப்பாயங்கள்


323அ. நிருவாகப்பணித் தீர்ப்பாயங்கள் :

(1) ஒன்றியத்தின் அல்லது மாநிலம் ஒன்றின் அலுவற்பாடுகளுடனோ இந்திய ஆட்சிநிலவரைக்குள் உள்ள அல்லது இந்திய அரசாங்கத்தின் கட்டாள்கையிலுள்ள உள்ளாட்சி அல்லது பிற அதிகாரஅமைப்பு ஒன்றின் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான அல்லது அதன் கட்டாள்கையிலுள்ள கூட்டுருமம் ஒன்றின் அலுவற்பாடுகளுடனோ தொடர்புடைய அரசுப் பணியங்களுக்கும் பணியடைகளுக்கும் ஆளெடுத்தல், அவற்றிற்கு அமர்த்தப் பெற்றவர்களின் பணிவரைக்கட்டுகள் பொறுத்த பூசல்கள், முறையீடுகள் ஆகியவற்றை நிருவாகப்பணித் தீர்ப்பாயங்கள் நீதிமுறையில் தீர்ப்பதற்கு அல்லது விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யலாம்.

(2). (1) ஆம் கூறின்படி இயற்றப்படும் ஒரு சட்டம்-

(அ) ஒன்றியத்திற்கென ஒரு நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எனவும் அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு எனவும் தனித்தனி நிருவாகப்பணித் தீர்ப்பாயத்தையும் நிறுவுவதற்கு வகைசெய்யலாம்;
(ஆ) மேற்சொன்ன தீர்ப்பாயங்கள் ஒவ்வொன்றும் செலுத்துவதாகும் அதிகாரவரம்பு (அவமதிப்புக்காகத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளடங்கலான) அதிகாரங்கள், அதிகாரஅடைவு ஆகியவற்றைக் குறித்துரைக்கலாம்;
(இ) மேற்சொன்ன தீர்ப்பாயங்கள் பின்பற்றவேண்டிய (காலவரம்பு, சான்று விதிகள் ஆகியவை பற்றிய வகையங்கள் உள்ளடங்கலான) நெறிமுறைக்கு வகைசெய்யலாம்;
(ஈ) 136ஆம் உறுப்பின்படி உச்ச நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் நீங்கலாக, (1) ஆம் கூறில் சுட்டப்பட்ட பூசல்கள் அல்லது முறையீடுகள் பொறுத்துப் பிற நீதிமன்றங்கள் அனைத்திற்கும் உள்ள அதிகாரத்தை விலக்கிவிடலாம்.(உ) அத்தகைய நிருவாகப்பணித் தீர்ப்பாயம் நிறுவப்படுவதை ஒட்டிமுன்பு ஒரு நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதிலும் முடிவுறாநிலையிலுள்ள வழக்குகள் எவற்றையும் அவற்றில் அடங்கும் உரிமைவழக்குகளுக்கோ நடவடிக்கைகளுக்கோ ஆதாரமான வழக்குமூலங்கள் மேற்சொன்ன தீர்ப்பாயம் நிறுவப்பட்டதன் பின்பு எழுந்திருந்திருக்குமாயின், எந்தத் தீர்ப்பாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டனவாக இருந்திருக்குமோ அந்தத் தீர்ப்பாயத்திற்கு மாற்றுவதற்கு வகைசெய்யலாம்;
(ஊ) 371ஈ உறுப்பின் (3) ஆம் கூறின்படி குடியரசுத்தலைவர் பிறப்பிக்கும் ஆணை எதனையும் நீக்கறவு அல்லது திருத்தம் செய்யலாம்;
(எ) அத்தகைய தீர்ப்பாயங்கள் திறம்படச் செயற்படுவதற்காகவும், அவற்றால் வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்படுவதற்காகவும், அவற்றின் ஆணைகளைச் செயலுறுத்துவதற்காகவும் தேவையென நாடாளுமன்றம் கருதும் (கட்டணங்கள் பற்றிய வகையங்கள் உள்ளடங்கலான) துணைவுறு, சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டிருக்கலாம்.

(3) இந்த அரசமைப்பின் பிற வகையம் எதிலும் அல்லது நிகழுறு காலத்தில் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் எது எவ்வாறிருப்பினும், இந்த உறுப்பின் வகையங்களே செல்திறம் உடையன ஆகும்.

323ஆ. பிற பொருட்பாடுகளுக்கான தீர்ப்பாயங்கள் :

(1) உரிய சட்டமன்றம், (2) ஆம் கூறில் குறித்துரைக்கப்பட்டவையாகவும் தான் சட்டங்களியற்றுவதற்கு அதிகாரம் கொண்டுள்ளவையாகவும் உள்ள பொருட்பாடுகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் பொறுத்து எழும் பூசல்கள், முறையீடுகள் அல்லது குற்றச்செயல்கள் எவற்றையும், தீர்ப்பாயங்களால் நீதிமுறையில் தீர்ப்பதற்கு அல்லது விசாரணை செய்வதற்குச் சட்டத்தினால் வகைசெய்யலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/172&oldid=1468972" இலிருந்து மீள்விக்கப்பட்டது