பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


பகுதி XV
தேர்தல்கள்


324. தேர்தல்களைக் கண்காணிப்பதும், நெறிப்படுத்துவதும் கட்டாள்கை புரிவதும் தேர்தல் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும் :

(1) நாடாளுமன்றம், மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றம் இவற்றிற்கான தேர்தல்கள் அனைத்திற்கும், வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, அத்தேர்தல்களை நடத்துவது, இந்த அரசமைப்பின்படி, குடியரசுத்தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் பதவிகளுக்கான தேர்தல்களை நடத்துவது, இவற்றைக் கண்காணிப்பதும் நெறிப்படுத்துவதும் கட்டாள்கை புரிவதும் (இந்த அரசமைப்பில் தேர்தல் ஆணையம் எனச் சுட்டப்படும்) ஓர் ஆணையத்திடம் உற்றமைந்திருக்கும்.

(2) தேர்தல் ஆணையமானது, தலைமைத் தேர்தல் ஆணையரையும், குடியரசுத்தலைவர் அவ்வப்போது குறித்திடும் எண்ணிக்கையிலான பிற தேர்தல் ஆணையர்கள், எவரேனுமிருப்பின், அவர்களையும் கொண்டிருக்கும்; மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் ஆகியோர், நாடாளுமன்றம் இதன்பொருட்டு இயற்றும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்தலைவரால் அமர்த்தப்பெறுவர்.

(3) பிற தேர்தல் ஆணையர் எவரும் அவ்வாறு அமர்த்தப்பெறும்போது தேர்தல் ஆணையத்தின் தலைவராகத் தலைமைத் தேர்தல் ஆணையர் செயலுறுவார்.

(4) மக்களவைக்கும், மாநிலம் ஒவ்வொன்றின் சட்டமன்றப் பேரவைக்குமான ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு முன்பும் சட்டமன்ற மேலவை உள்ள மாநிலம் ஒவ்வொன்றிலும் முதலாம் பொதுத் தேர்தலுக்கு முன்பும் அதன்பின்பு நடைபெறும் அம்மேலவைக்கான ஈராண்டுமுறைத் தேர்தல் ஒவ்வொன்றுக்கும் முன்பும், குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாய்வு செய்த பின்பு, (1) ஆம் கூறினால் அந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள செயற்பணிகள் புரிவதில் தேர்தல் ஆணையத்திற்கு உற்றுதவி செய்வதற்குத் தேவையெனத் தாம் கருதும் மண்டல ஆணையர்களையும் அமர்த்தலாம்.

(5) நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் எதனின் வகையங்களுக்கும் உட்பட்டு, தேர்தல் ஆணையர்கள், மண்டல ஆணையர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவியுரிமைக்காலமும், குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின் வழித் தீர்மானிக்கிறவாறு இருக்கும்:

வரம்புரையாக: உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை அகற்றுவதுபோல் அதே முறையிலும் அதே காரணங்களின்மீதும் அன்றி, தலைமைத் தேர்தல் ஆணையரை அவருடைய பதவியிலிருந்து அகற்றுதல் ஆகாது; மேலும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பணிவரைக்கட்டுகள், அவர் அமர்த்தப்பெற்ற பின்பு அவருக்குப் பாதகமான வகையில் மாற்றப்படுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: பிற தேர்தல் ஆணையர் அல்லது மண்டல ஆணையர் எவரையும் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்மீது அன்றி, பதவியிலிருந்து அகற்றுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/175&oldid=1468980" இலிருந்து மீள்விக்கப்பட்டது