பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


(6). (1) ஆம்கூறின்படி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் பணியாளர் தொகுதியைத் தேர்தல் ஆணையம் வேண்டும்போது அத்தேர்தல் ஆணையத்திற்கு அல்லது மண்டல ஆணையருக்குக் குடியரசுத்தலைவர் அல்லது ஒரு மாநில ஆளுநர் கிடைக்குமாறு செய்வார்.

325. சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ, தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமெனக் கோருவதற்கோ எவரும் தகுமையற்றவர் ஆகார் :

நாடளுமன்ற ஈரவைகளில் எதற்கும் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற அவைக்கு அல்லது சட்டமன்ற ஈரவைகளில் எதற்கும் நடைபெறும் தேர்தலுக்காக, நிலவரைத் தேர்தல் தொகுதி ஒவ்வொன்றுக்கும் பொதுவியலான வாக்காளர் பட்டியல் ஒன்று இருக்கும்; மேலும், சமயம், இனம், சாதி, பாலினம் மட்டுமே அல்லது அவற்றுள் ஏதொன்றையும் மட்டுமே காரணமாகக்கொண்டு அத்தகைய பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ, அத்தேர்தல் தொகுதிக்கென தனியுறு வாக்காளர் பட்டியல் ஒன்றில் சேர்க்கப்படவேண்டுமெனக் கோருவதற்கோ எவரும் தகுமையற்றவர் ஆகார்.

326. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும் :

மக்களவைக்கும், ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவைக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும்; அதாவது இந்தியாவின் குடிமகனாகவும், உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ அதன் பொருட்டுக் குறித்திடப்படும் தேதியன்று பதினெட்டு வயதுக்குக் குறையாதவராகவும், இந்த அரசமைப்பின்படி அல்லது உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டம் எதன்படியும் குடியிருப்பின்மை, பித்துநிலை, குற்றம் புரிதல் அல்லது தேர்தலில் ஒழுங்கீனமான அல்லது சட்டமுரணான நடவடிக்கை காரணமாகப் பிறவாறு தகுதிக்கேடுறாதவராகவும் உள்ள ஒவ்வொருவரும், அத்தகைய தேர்தல் எதிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

327. சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் :

இந்த அரசமைப்பின் - வகையங்களுக்குட்பட்டு, நாடளுமன்ற ஈரவைகளில் எதற்கும் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற அவைகளின் அல்லது அதன் ஈரவைகளில் எதற்குமான தேர்தல்களைப் பொறுத்து அல்லது அவை தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் தயாரித்தல், தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் அத்தகைய அவையை அல்லது அவைகளை உரியவாறு அமைப்பதற்குத் தேவையான பிற பொருட்பாடுகள் ஆகிய அனைத்தையும் பொறுத்து நாடளுமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் வகைசெய்யலாம்.

328. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு அச்சட்டமன்றத்திற்குள்ள அதிகாரம் :

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டும் நாடாளுமன்றத்தால் இதன்பொருட்டு வகைசெய்யப்பட்டிராத அளவுக்கும், ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அவைக்கான அல்லது அதன் ஈரவைகளில் எதற்குமான தேர்தல்களைப் பொறுத்து அல்லது அவை தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் தயாரித்தல், அத்தகைய அவையை அல்லது அவைகளை அமைப்பதற்குத் தேவையான பிற பொருட்பாடுகள் ஆகிய அனைத்தையும் பொறுத்து அந்த மாநிலச் சட்டமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் வகைசெய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/176&oldid=1468982" இலிருந்து மீள்விக்கப்பட்டது