பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


விளக்கம்:- இந்த உறுப்பிலும் 332ஆம் உறுப்பிலும் "மக்கள் தொகை” என்னும் சொல் மக்கள் கணக்கெடுப்பின் தொகை விவரங்கள் கண்டறிந்து வெளியிடப்பட்டுள்ள கடைசி முறை மக்கள் கணக்கெடுப்பின்படியான மக்கள் தொகை என்று பொருள்படும்.

வரம்புரையாக: இந்த விளக்கத்தில் தொகை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள கடைசி முறை மக்கள் கணக்கெடுப்பு என்பது [1][2026]ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்படும் மக்கள் கணக்கெடுப்பின்படியான தொகை விவரங்கள் வெளியிடப்படும் வரையிலும் [2][2001]ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பைச் சுட்டுவதாகவே பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

331. மக்களவையில் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்குச் சார்பாற்றம் :

81ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், மக்களவையில் ஆங்கிலோஇந்தியர் சமூகத்தினர் போதிய அளவு சார்பாற்றம் பெற்றிருக்கவில்லையெனக் கருதுவாராயின், அச்சமூகத்தினரில் இருவருக்கு மேற்படாதவர்களை மக்களவைக்கு உறுப்பினர்களாக நியமனம் செய்யலாம்.

332. பட்டியலில் கண்ட சாதியினருக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளில் பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல் :

(1) ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையிலும், பட்டியலில் கண்ட சாதியினருக்கும் அசாமின் தன்னாட்சி மாவட்டங்களிலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினர் அல்லாத பிற பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கும் பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

(2) அசாம் மாநிலச் சட்டமன்றப் பேரவையில், தன்னாட்சி மாவட்டங்களுக்காகவும் பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.

(3) மாநிலம் ஒன்றன் சட்டமன்றப் பேரவையில் பட்டியலில் கண்ட சாதியினருக்கு அல்லது பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு (1) ஆம் கூறின்படி ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கைக்கும் அப்பேரவையில் உள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கைக்கும் இடையிலான வீதஅளவானது, கூடுமானவரையில், அவ்வாறு பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் அந்த மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட சாதியினருடைய அல்லது அந்த மாநிலத்தில் அல்லது, நேர்வுக்கேற்ப, அந்த மாநிலத்தின் பகுதியில் உள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினருடைய மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகைக்கும் இடையிலான அதே வீதஅளவில் இருத்தல் வேண்டும்.

(3அ). (3)ஆம் கூறில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு எடுக்கப்படும் முதலாம் மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் அருணாசலப்பிரதேச, மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளிலுள்ள பதவியிடங்களின் எண்ணிக்கையில் செய்யப்படும் மறுநேரமைவானது 170ஆம் உறுப்பின்படி செல்திறம் பெறும்வரையில், அத்தகைய மாநிலம் எதனின் சட்டமன்றப் பேரவையிலும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கென ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய பதவியிடங்கள் கீழ்க்கண்டவாறு இருத்தல்வேண்டும்.

(அ) 1987ஆம் ஆண்டு அரசமைப்பு (ஐம்பத்தேழாம் திருத்தம்) சட்டம் செல்லாற்றல்பெறும் தேதியன்று, அந்த மாநிலத்தில் (இந்தக் கூறில் இதன் பின்பு நிலவுறும் சட்டமன்றப் பேரவை எனச் சுட்டப்படும்) நிலவுறும் சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடங்கள் அனைத்தும் பட்டியலில் கண்ட பழங்குடி உறுப்பினர்களால் வகித்து வரப்படுமாயின், அவற்றில் ஒரு பதவியிடம் தவிர, பிற பதவியிடங்கள் அனைத்தும்:


  1. 2001ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஏழாம் திருத்தம்) சட்டத்தால் மாற்றாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/178&oldid=1468987" இலிருந்து மீள்விக்கப்பட்டது