பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


வரம்புரையாக: இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பத்தாண்டுகள் முடிவுற்றதும், அத்தகைய ஒதுக்கீடுகள் அனைத்தும் அற்றுப்போகும்.

(2) ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினரைப் பிற சமூகத்தினருடன் ஒப்பிடுகையில், திறமையின் அடிப்படையில் அமர்த்தப்பெறுவதற்கு அவர்கள் தகுதிப்பாடுடையவர்களாக இருக்குமிடத்து, (1)ஆம் கூறிலுள்ள எதுவும், அந்தக் கூறின்படி அச்சமூகத்தினருக்கென ஒதுக்கீடு செய்யப்படும் பணியடைகள் அல்லாத பிற பணியடைகளுக்கோ அதற்கும் கூடுதலான பணியடைகளுக்கோ அச்சமூகத்தினரை அமர்த்துவதற்குத் தடையாக இருப்பதில்லை.

337. ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினரின் நலனுக்காகக் கல்வி மானியங்கள் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குப் பின்பு முதல் மூன்று நிதியாண்டுகளின்போது கல்வி பொறுத்து, ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினரின் நலனுக்காக, 1948 மார்ச்சு முப்பத்தொன்றாம் நாளுடன் முடிவடைந்த நிதியாண்டில் அளிக்கப்பட்டுவந்த மானியங்கள், எவையேனுமிருப்பின், அவை ஒன்றியத்தினாலும் ஒவ்வொரு மாநிலத்தினாலும் அளிக்கப்பட்டு வருதல் வேண்டும். அதற்கு அடுத்துப் பின்வரும் ஒவ்வொரு மூன்றாண்டுக் காலஅளவின் போதும் அந்த மானியங்கள், அதற்கு ஒட்டி முந்தைய மூன்றாண்டுக் காலஅளவிற்கு வழங்கப்பட்ட மானியங்களைவிடப் பத்து விழுக்காடு குறைவாக இருக்கலாம்:

வரம்புரையாக: இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பத்தாண்டுகள் முடிவுற்றதும், அத்தகைய மானியங்கள், அவை ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினருக்கான ஒரு தனியுறு சலுகையாக இருக்கின்ற அளவுக்கு அற்றுப்போகும்:

மேலும் வரம்புரையாக: கல்வி நிறுவனம் எதிலும் ஆண்டுதோறும் சேர்க்கப்பெறுபவர்களில் குறைந்தது நூற்றுக்கு நாற்பது பேர் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினர் அல்லாத பிற சமூகத்தினராக இருந்தாலன்றி, அக்கல்வி நிறுவனம் இந்த உறுப்பின்படி மானியம் எதனையும் பெறுவதற்கு உரிமைகொண்டது ஆகாது.

338. [1][பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம்] :

[1][(1) பட்டியலில் கண்ட சாதியினருக்கான தேசிய ஆணையம் என்று அழைக்கப்பெறும் ஆணையம் ஒன்று பட்டியலில் கண்ட சாதியினருக்காக இருத்தல் வேண்டும்.

(2) நாடாளுமன்றத்தினால் இதன்பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும், மேலும், அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், துணைத் தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத் தலைவர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

(3) ஆணையத்தின் தலைவர் துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத்தலைவர், தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின்வழி அமர்த்துவார்.

(4) ஆணையம், தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்.

(5) பின்வருவன ஆணையத்தின் கடமைகள் ஆகும்—

(அ) இந்த அரசமைப்பின்படி அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற
சட்டம் ஒன்றன்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றன்படி பட்டியலில் கண்ட சாதியினருக்கு [2][*****] வகை செய்யப்பட்டுள்ள காப்பணைவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்பணைவுகளின் செயற்பாட்டு விளைபயனைக் கணித்தல்;
(ஆ) பட்டியலில் கண்ட சாதியினரின் [2][******] உரிமைகளும் காப்பணைவுகளும் பறிக்கப்படுவது பற்றிய குறிப்பிட்ட முறையீடுகளை விசாரணை செய்தல்;


  1. 1.0 1.1 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தினால் மாற்றாக அமைக்கப்பட்டது.
  2. 2.0 2.1 "மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர்கள்” என்ற சொற்கள் 2003ஆம் ஆண்டு அரசமைப்பு (எண்பத்து ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தினால் விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/181&oldid=1468858" இலிருந்து மீள்விக்கப்பட்டது