பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


(ஊ) குடியரசுத்தலைவர், வகுக்கும் விதிகளில் கூறப்படும் பிற பொருட்பாடுகள்.

(9) ஒன்றியமும், ஒவ்வொரும் மாநில அரசாங்கமும் பட்டியலில் கண்ட சாதியினரைப் [1][ * * ] பாதிக்கும் முக்கியமான கொள்கைகள் அனைத்திலும் ஆணையத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

(10) இந்த உறுப்பில், பட்டியலில் கண்ட சாதிகள் [* * *] என்னும் சுட்டுரைகள், குடியரசுத்தலைவர் 340ஆம் உறுப்பின் (1)ஆம் கூறுன்படி அமர்த்தப்படும் ஓர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்றதன் மேல், ஆணையின்வழி குறித்துரைக்கும் பிற பிற்பட்ட வகுப்புகளையும், அத்துடன் ஆங்கிலோ-இந்தியர் சமூகத்தினையும் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படும்.

[2][338அ. பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்:]

(1) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் என்று அழைக்கப்பெறும் ஆணையம் ஒன்று பட்டியலில் கண்ட பழங்குடியினருக்காக இருத்தல்வேண்டும்.

(2) நாடாளுமன்றத்தினால் இதன்பொருட்டு இயற்றப்படும் சட்டம் ஒன்றன் வகையங்களுக்கு உட்பட்டு, தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும்; மேலும், அவ்வாறு அமர்த்தப்பெறும் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரின் பணி வரைக்கட்டுகளும் பதவிக்காலமும் குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி இருக்கும்.

(3) ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர், பிற உறுப்பினர்கள் ஆகியோரை குடியரசுத்தலைவர், தம் கையொப்பமும் முத்திரையும் கொண்ட அதிகார ஆணையின் வழி அமர்த்துவார்.

(4) ஆணையம், தனக்குரிய நெறிமுறையை ஒழுங்குறுத்த அதிகாரம் உடையது ஆகும்.

(5) பின்வருவன ஆணையத்தின் கடமைகள் ஆகும்

(அ) இந்த அரசமைப்பின்படி அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் ஒன்றன்படி அல்லது அரசாங்க ஆணை ஒன்றன்படி பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு வகைசெய்யப்பட்டுள்ள காப்பணைவுகள் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் ஆய்ந்து காணுதல் மற்றும் கண்காணித்தல்; மேலும், அந்தக் காப்பணைவுகளின் செயற்பாட்டு விளைபயனைக் கணித்தல்;
(ஆ) பட்டியலில் கண்ட பழங்குடியினரின் உரிமைகளும் காப்பணைவுகளும் பறிக்கப்படுவது பற்றிய குறிப்பிட்ட முறையீடுகளை விசாரணை செய்தல்;
(இ) பட்டியலில் கண்ட பழங்குடியினரின் சமூக-பொருளியல் வளர்ச்சிக்கான திட்டமிடு செய்முறையில் பங்கேற்றல் மற்றும் அறிவுரை வழங்குதல்; மேலும், ஒன்றியத்திலும் மாநிலம் எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணித்தல்;
(ஈ) அந்தக் காப்பணைவுகளின் செயற்பாடு பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக் கருதும் பிற காலங்களிலும் குடியரசுத்தலைவரிடம் முன்னிடுதல்;
(உ) பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கான காப்பணைவுகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக-பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றிற்கான பிற நடவடிக்கைகளையும் திறம்படச் செயற்படுத்துவதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்


  1. 2003ஆம் ஆண்டு அரசமைப்புச் (எண்பத்து ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தால் விட்டுவிடப்பட்டது.
  2. 2. மேற்படி சட்டத்தால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/183&oldid=1468955" இலிருந்து மீள்விக்கப்பட்டது