பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


(2) ஒரு மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரின் நல்வாழ்விற்கு இன்றியமையாதவை எனப் பணிப்புரையில் குறித்துரைக்கப்படும் திட்டங்களை வகுப்பது பற்றியும், அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் அந்த மாநிலத்திற்குப் பணிப்புரைகள் இடுவதும் ஒன்றியத்து ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.

340. பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆய்ந்து காண்பதற்கு ஆணையம் ஒன்றை அமர்த்துதல் :

(1) இந்திய ஆட்சிநிலவரையிலுள்ள சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளையும் அவர்களை உழற்றும் இடர்ப்பாடுகளையும் ஆய்ந்து காண்பதற்கும் அத்தகைய இடர்ப்பாடுகளை அகற்றி, அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு ஒன்றியம் அல்லது மாநிலம் எதுவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதன்பொருட்டு ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அளிக்கவேண்டிய மானியங்கள் பொறுத்தும் அம்மானியங்கள் எந்த வரைக்கட்டுகளுக்குட்பட்டு அளிக்கப்படவேண்டும் என்பது பற்றியும் பரிந்துரைகள் செய்வதற்கும், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி, தாம் தக்கவர்களெனக் கருதுபவர்களைக் கொண்ட ஆணையம் ஒன்றை அமர்த்தலாம்; அத்தகைய ஆணையத்தை அமர்த்துகிற ஆணையானது, அந்த ஆணையம் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளையும் வரையறை செய்யும்.

(2) அவ்வாறு அமர்த்தப்பட்ட ஆணையம், தனக்குக் குறித்தனுப்பப்பட்டுள்ள பொருட்பாடுகளை ஆய்வுசெய்து தான் கண்டறிந்த பொருண்மைகளை விவரித்துத் தான் ஏற்புடையவை எனக் கருதும் பரிந்துரைகளுடன் ஓர் அறிக்கையைக் குடியரசுத்தலைவரிடம் அளித்தல் வேண்டும்.

(3) அவ்வாறு அளிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு படியினை, அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை விளக்கும் விவரக்குறிப்புடன் சேர்த்து, குடியரசுத்தலைவர், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றின் முன்பும் வைக்குமாறு செய்வார்.

341. பட்டியலில் கண்ட சாதிகள் :

(1) மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதனைப் பொறுத்தும், அது ஒரு மாநிலமாக இருக்குமிடத்து அதன் ஆளுநரைக் கலந்தாய்வு செய்தபின்பு, அந்த மாநிலம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒன்றியத்து ஆட்சிநிலவரை தொடர்பாக, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை பட்டியலில் கண்ட சாதிகள் என்று கொள்ளப்பட வேண்டிய சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் எவை என்றும், சாதிகளில், இனங்களில் அல்லது பழங்குடிகளில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவை என்றும் குடியரசுத்தலைவர் பொது அறிவிக்கை வாயிலாகக் குறித்துரைக்கலாம்.

(2) நாடாளுமன்றம் சட்டத்தினால், சாதி, இனம் அல்லது பழங்குடி எதனையும் அல்லது சாதியில், இனத்தில் அல்லது பழங்குடியில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவற்றையும், (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒன்றில் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் கண்ட சாதிகளின் வரிசைத் தொகுப்பில் சேர்க்கலாம் அல்லது அத் தொகுப்பிலிருந்து நீக்கிவிடலாம்; ஆனால், மேலே கண்டவாறன்றி, மேற்சொன்ன கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் அறிவிக்கையானது பிந்திய அறிவிக்கை எதனாலும் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

342. பட்டியலில் கண்ட பழங்குடிகள் :

(1) மாநிலம் அல்லது ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதனைப் பொறுத்தும், அது ஒரு மாநிலமாக இருக்குமிடத்து அதன் ஆளுநரைக் கலந்தாய்வு செய்த பின்பு, அந்த மாநிலம் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒன்றியத்து ஆட்சிநிலவரை தொடர்பாக, இந்த அரசமைப்பினைப் பொறுத்தவரை பட்டியலில் கண்ட பழங்குடிகள் என்று கொள்ளப்படவேண்டிய பழங்குடிகள், பழங்குடிச் சமூகங்கள் எவை என்றும், பழங்குடிகளில் அல்லது பழங்குடிச் சமூகங்களில் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவை என்றும் குடியரசுத்தலைவர் பொது அறிவிக்கை வாயிலாகக் குறித்துரைக்கலாம்.

(2) நாடாளுமன்றம், சட்டத்தினால் பழங்குடி அல்லது பழங்குடிச் சமூகம் எதனையும் அல்லது அந்த பழங்குடி அல்லது பழங்குடி சமூகம் எதிலும் உள்ள பகுதிகள் அல்லது தொகுதிகள் எவற்றையும், (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒன்றில் குறித்துரைக்கப்பட்ட பட்டியலில் கண்ட பழங்குடிகளின் வரிசைத் தொகுப்பில் சேர்க்கலாம் அல்லது அத்தொகுப்பிலிருந்து நீக்கிவிடலாம்; ஆனால், மேலே கண்டவாறன்றி, மேற்சொன்ன கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஓர் அறிவிக்கையானது, பிந்திய அறிவிக்கை எதனாலும் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/185&oldid=1468860" இலிருந்து மீள்விக்கப்பட்டது