பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


பகுதி XVII
அரசு அலுவல் மொழி
அத்தியாயம் I
ஒன்றியத்தின் மொழி


343. ஒன்றியத்து அரசு அலுவல் மொழி :

(1) தேவநாகரி வரிவடிவிலுள்ள இந்தி, ஒன்றியத்து அரசு அலுவல் மொழியாக இருக்கும். ஒன்றியத்து அரசு அலுவல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய எண்களின் வடிவம், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவமாக இருக்கும்.

(2) (1)ஆம் கூறில் எது எவ்வாறிருப்பினும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பதினைந்து ஆண்டுக் காலஅளவிற்கு ஆங்கில மொழியே, இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு பயன்படுத்தப்பட்டவாறு ஒன்றியத்து அரசு அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும்:

வரம்புரையாக: மேற்சொன்ன காலஅளவின்போது, ஒன்றியத்து அரசுஅலுவல் நோக்கங்களில் எதற்கும் ஆங்கில மொழியோடும்கூட இந்தி மொழியையும், இந்திய எண்களின் பன்னாட்டு வடிவத்தோடுங்கூட, அந்த எண்களின் தேவநாகரி வடிவத்தையும் பயன்படுத்துவதற்கு, குடியரசுத்தலைவர் ஆணையின்வழி அதிகாரமளிக்கலாம்.

(3) இந்த உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன பதினைந்து ஆண்டுக் காலஅளவிற்குப் பின்பும், நாடாளுமன்றம் சட்டத்தினால் அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படும் நோக்கங்களுக்காக

(அ) ஆங்கில மொழியினை, அல்லது
(ஆ) எண்களின் தேவநாகரி வடிவத்தினைப்

பயன்படுத்துவதற்கு வகைசெய்யலாம்.

344. அரசு அலுவல் மொழிக்கான ஆணையமும் நாடாளுமன்றக் குழுவும் :

(1) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து ஐந்தாண்டுகள் கழிவுறும்போதும் அதன்பின்பு அத்தகைய தொடக்கநிலையிலிருந்து பத்தாண்டுகள் கழிவுறும்போதும், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி, ஒரு தலைவரையும், எட்டாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மொழிகளுக்குச் சார்பாற்றுநர்களாகக் குடியரசுத்தலைவரால் அமர்த்தப்பெறும் பிற உறுப்பினர்களையும் கொண்ட ஓர் ஆணையத்தை அமைப்பார்; மேலும், அந்த ஆணையம் பின்பற்றவேண்டிய நெறிமுறையையும் அந்த ஆணை வரையறை செய்யும்.

(2) குடியரசுத்தலைவருக்குப் பின்வருவனபற்றி பரிந்துரைகள் செய்வது அந்த ஆணையத்தின் கடமை ஆகும்—

(அ) ஒன்றியத்து அரசுஅலுவல்களுக்காக மேன்மேலும் இந்திமொழியைப் பயன்படுத்துதல்;
(ஆ) ஒன்றியத்து அரசுஅலுவல்கள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் எதற்கும் ஆங்கிலமொழியைப் பயன்படுத்துவதை வரையறுத்தல்;
(இ) 348ஆம் உறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் அனைத்திற்காகவும் அல்லது அவற்றுள் எதற்காகவும் பயன்படுத்தப்படவேண்டிய மொழி;
(ஈ) குறித்துரைக்கப்படும் ஒன்றியத்து நோக்கங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படவேன்டிய எண்களின் வடிவம்;
(உ) ஒன்றியத்து அரசுஅலுவல் மொழி, ஒன்றியத்திற்கும் ஒரு மாநிலத்திற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே செய்தித் தொடர்புக்கான மொழி, அவற்றின் பயன்பாடு ஆகியவை பற்றி குடியரசுத்தலைவர் ஆணையத்திற்குக் குறித்தனுப்பும் பிற பொருட்பாடு எதுவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/186&oldid=1468958" இலிருந்து மீள்விக்கப்பட்டது