பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161


(3) இந்த ஆணையம் (2)ஆம் கூறின்படி தனது பரிந்துரைகளைச் செய்கையில், இந்தியாவின் தொழில் துறை, பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கும் அரசுப் பணியங்களைப் பொறுத்து இந்தி பேசாத பகுதிகளைச் சார்ந்தவர்களின் நலன்களுக்கும் நேரிய கோரிக்கைகளுக்கும் உரிய மதிப்புக் கொடுத்தல் வேண்டும்.

(4) முப்பது உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படும்; அக்குழு ஒற்றைமாற்று வாக்கு என்னும் முறையில் வீதச் சார்பாற்று முறைக்கிணங்க, மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற வேண்டிய மக்களவை உறுப்பினர்கள் இருபது பேரையும் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பெற வேண்டிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்துபேரையும் கொண்டிருக்கும்.

(5). (1) ஆம் கூறின்படி அமைக்கப்படும் ஆணையத்தின் பரிந்துரைகளை ஆராய்ந்து, அவற்றின் மீதான தன் கருத்தினைக் குடியரசுத்தலைவருக்கு அறிவித்தல் அந்தக் குழுவின் கடமை ஆகும்.

(6). 343ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், (5)ஆம் கூறில் சுட்டப்பட்டுள்ள அறிக்கையை ஓர்வுசெய்த பின்பு, அந்த அறிக்கை முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் இணங்க பணிப்புரைகளை இடலாம்.

அத்தியாயம் II
மண்டல மொழிகள்


345. மாநிலத்து அரசு அலுவல்மொழி அல்லது மொழிகள் :

346, 347 ஆகிய உறுப்புகளின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு மாநிலச் சட்டமன்றம், அந்த மாநிலத்தில் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றை அல்லது அதற்கு பேற்பட்டவற்றை அல்லது இந்தியை அந்த மாநிலத்தின் அரசு அலுவல்கள் அனைத்திற்கும் அல்லது அவற்றுள் எதற்கும் பயன்படுத்தப்படுவதற்கான மொழியாக அல்லது மொழிகளாகச் சட்டத்தினால் ஏற்று மேற்கொள்ளலாம் :

வரம்புரையாக: அந்த மாநிலச் சட்டமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்கிற வரையில், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அந்த மாநிலத்திற்குள் ஆங்கிலமொழி பயன்படுத்தப்பட்டுவந்த அரசு அலுவல்களுக்கு அம்மொழியே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவரும்.

346. ஒரு மாநிலத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையே அல்லது ஒரு மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழி :

ஒன்றியத்தின் அரசு அலுவல்களுக்குப் பயன்படுத்துவதற்கென அப்போதைக்கு அதிகாரம் பெற்ற மொழியே, ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையேயும், ஒரு மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையேயும் செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழியாக இருக்கும்:

வரம்புரையாக: இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள், தங்களுக்கிடையே செய்தித் தொடர்புக்கான அரசு அலுவல் மொழியாக இந்திமொழி இருத்தல் வேண்டுமென ஒத்துக்கொள்ளுமாயின், அத்தகைய செய்தித் தொடர்புக்காக அந்த மொழியே பயன்படுத்தப்படலாம்.

347. ஒரு மாநில மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் பேசும் மொழி பொறுத்த தனியுறு வகையம் :

ஒரு மாநில மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், தாங்கள் பேசும் மொழியின் பயன்பாட்டிற்கு அந்த மாநிலம் ஏற்பளிக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை, அதற்கென விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையின்மீது குடியரசுத்தலைவர் தெளிவுறக்காண்பாராயின், அவர், தாம் குறித்துரைக்கும் நோக்கத்திற்காக, அந்த மாநிலம் எங்கணும் அல்லது அதன் பகுதி எதிலும், அந்த மொழிக்கும் அதிகாரமுறையில் ஏற்பளிக்க வேண்டுமெனப் பணிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/187&oldid=1468960" இலிருந்து மீள்விக்கப்பட்டது