பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


அத்தியாயம் III
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் முதலியவற்றின் மொழி

348. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் சட்டங்கள், சட்டமுன் வடிவுகள் முதலியவற்றிற்கும் பயன்படுத்த வேண்டிய மொழி :

(1) இந்தப் பகுதியின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகை செய்யும் வரை-

(அ) உச்ச நீதிமன்றத்தின் மற்றும் ஒவ்வோர் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும்,
(ஆ)

(i) நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் அல்லது மாநிலச் சட்டமன்ற அவையில் அல்லது ஈரவைகளில் எதிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் சட்டமுன்வடிவுகள் அல்லது முன்மொழியப்படவிருக்கும் அனைத்துத் திருத்தங்கள்,
(ii) நாடாளுமன்றத்தால் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் அனைத்துச் சட்டங்கள், குடியரசுத்தலைவரால் அல்லது ஒரு மாநில ஆளுநரால் சாற்றம் செய்யப்படும் அனைத்து அவசரச் சட்டங்கள்,
(iii) இந்த அரசமைப்பின்படி அல்லது நாடாளுமன்றத்தால் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் எதன்படியும் பிறப்பிக்கப்படும் அனைத்து ஆணைகள், விதிகள், ஒழுங்குறுத்தும் விதிகள், துணைவிதிகள் ஆகியவற்றின் அதிகாரஉறுதிபெற்ற வாசகங்களும் ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.

(2). (1) ஆம் கூறின் (அ) உட்கூறில் எது எவ்வாறிருப்பினும் ஒரு மாநில ஆளுநர், குடியரசுத்தலைவரின் முன் இசைவுடன், அந்த மாநிலத்தில் தலைமை அமர்கையிடம் கொண்டுள்ள உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் இந்தி மொழியை அல்லது அந்த மாநிலத்து அரசு அலுவல்கள் எவற்றிற்கும் பயன்படுத்தப்படும் பிற மொழி எதனையும் பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்கலாம்:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், அத்தகைய உயர் நீதிமன்றம் வழங்கும் அல்லது பிறப்பிக்கும் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதற்கும் பொருந்துறுதல் ஆகாது.

(3). (1) ஆம் கூறின் (ஆ) உட்கூறில் எது எவ்வாறிருப்பினும், ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவுகளில் அல்லது அந்தச் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களில் அல்லது அந்த மாநில ஆளுநர் சாற்றம் செய்யும் அவசரச்சட்டங்களில் அல்லது அந்த உட்கூறின் (iii)ஆம் பத்தியில் சுட்டப்பட்டுள்ள ஆணை, விதி, ஒழுங்குறுத்தும்விதி அல்லது துணைவிதி எதிலும் பயன்படுத்துவதற்காக, ஆங்கில மொழி அல்லாத பிற மொழி எதனையும் அந்த மாநிலச் சட்டமன்றம் வகுத்துரைத்துள்ளவிடத்து அந்த மாநிலத்தின் அதிகாரமுறை அரசிதழில் அந்த மாநில ஆளுநரின் அதிகாரத்தின்படி ஆங்கில மொழியில் வெளியிடப்படும் அதன் மொழிப்பெயர்ப்பானது, இந்த உறுப்பின்படி ஆங்கில மொழியில் அதன் அதிகாரஉறுதிபெற்ற வாசகமாகக் கொள்ளப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/188&oldid=1469052" இலிருந்து மீள்விக்கப்பட்டது