பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


349. மொழி தொடர்பாகக் குறித்தசில சட்டங்களை இயற்றுவதற்கான தனியுறு நெறிமுறை :

இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து பதினைந்தாண்டுக் காலஅளவின்போது 348ஆம் உறுப்பின் (1)ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களில் எதற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய மொழிக்காக வகை செய்யும் சட்டமுன்வடிவு அல்லது திருத்தம் எதுவும், குடியரசுத்தலைவரின் முன் ஒப்பளிப்பு இன்றி, நாடாளுமன்ற ஈரவைகளில் எதிலும் அறிமுகப்படுத்தப்படுதலோ முன்மொழியப்படுதலோ ஆகாது; மேலும், குடியரசுத்தலைவர், 344 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறின்படி அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளையும் அந்த உறுப்பின் (4)ஆம் கூறின்படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் ஓர்வுசெய்த பின்பு தவிர, அத்தகைய சட்டமுன்வடிவு எதனையும் அறிமுகப்படுத்துவதற்கு அல்லது திருத்தம் எதனையும் முன்மொழிவதற்குத் தமது ஒப்பளிப்பை அளித்தல் ஆகாது.

அத்தியாயம் IV
தனியுறு நெறியுரைகள்

350. குறைகளைத் தீர்ப்பதற்கான உரையீடுகளில் பயன்படுத்தப்படவேண்டிய மொழி :

ஒன்றியத்தின் அல்லது ஒரு மாநிலத்தின் அலுவலர் எவரிடமும் அல்லது அதிகார அமைப்பு எதனிடமும், குறை எதனையும் தீர்ப்பதற்கான ஓர் உரையீட்டினை அந்த ஒன்றியத்தில் அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழிகள் எதனிலும் அளிப்பதற்கு ஒவ்வொருவரும் உரிமை கொண்டவர் ஆவார்.

[350அ. தொடக்கநிலையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கான வசதிகள் :

மொழிச் சிறுபான்மைக் குழுமங்களைச் சார்ந்த குழந்தைகள் தொடக்கநிலையில் தாய்மொழியில் கல்வி கற்கப் போதிய வசதிகள் செய்து கொடுக்க ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்திற்குள் உள்ள உள்ளாட்சி அதிகாரஅமைப்பு ஒவ்வொன்றும் முனைந்து முயலுதல் வேண்டும்: மேலும், குடியரசுத்தலைவர் அத்தகைய வசதிகளை உறுதி செய்வதற்குத் தேவையானவை அல்லது முறையானவை என்று தாம் கருதும் பணிப்புரைகளை மாநிலம் எதற்கும் பிறப்பிக்கலாம்.

[1]350ஆ. மொழிச் சிறுபான்மையினருக்கான தனி அலுவலர் :

(1) மொழிச் சிறுபான்மையினருக்கென குடியரசுத்தலைவரால் அமர்த்தப்பெறும் தனி அலுவலர் ஒருவர் இருப்பார்.

(2) இந்த அரசமைப்பின்படி மொழிச் சிறுபான்மையினருக்காக வகை செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான அனைத்துப் பொருட்பாடுகளையும் ஆராய்ந்து, அந்தப் பொருட்பாடுகளின்மீது குடியரசுத்தலைவர் பணிக்கும் காலங்களில் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளிப்பது அந்தத் தனி அலுவலரின் கடமை ஆகும்; மேலும், குடியரசுத்தலைவர், அத்தகைய அறிக்கைகள் அனைத்தையும் நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்கும்படியும் தொடர்புடைய மாநிலங்களின் அரசாங்கங்களுக்கு அனுப்பும்படியும் செய்வார்.]

351. இந்தி மொழி வளர்ச்சிக்கான நெறியுரை :

இந்தி மொழியைப் பரப்புவதற்கு ஊக்கமளிப்பதும், இந்தியாவின் கலப்புருவான பண்பாட்டின் எல்லாக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சாதனமாக இருக்கும்வண்ணம் அதனை வளர்ப்பதும், அதன் தனி நீர்மையைக் கலைக்காது இந்துஸ்தானியிலும் எட்டாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள பிற இந்திய மொழிகளிலும் பயன்படுத்தப்படும் வடிவமைவுகள், நடையமைவுகள், உரையமைவுகள் ஆகியவற்றைத் தன்மயமாக்குவதன் மூலமும், அதன் சொல்வளத்திற்குத் தேவையாகவோ விரும்பத் தகுந்ததாகவோ உள்ள இடத்தெல்லாம் முதலில் சமஸ்கிருதத்திலிருந்தும் இரண்டதாவதாகப் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமும், அதனை வளப்படுத்த முயல்வதும் ஒன்றியத்தின் கடமை ஆகும்.


  1. 1956 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 21ஆம் பிரிவினால் புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/189&oldid=1469051" இலிருந்து மீள்விக்கப்பட்டது