பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


பகுதி XVIII
நெருக்கடிநிலை பற்றிய வகையங்கள்


352. நெருக்கடிநிலைச் சாற்றாணை :

(1) போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சி காரணமாக, இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கும் கடுமையான நெருக்கடிநிலை எழுந்துள்ளது எனக் குடியரசுத்தலைவர் தெளிவுறக்காண்பாராயின், அவர், சாற்றாணையின்வழி, இந்தியா முழுவதிலுமோ அச்சாற்றாணையில் குறித்துரைக்கப்படும் அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதிலுமோ, அத்தகைய நிலை எழுந்துள்ளது என விளம்பலாம்.

விளக்கம்.-போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதந்தாங்கியோரின் கிளர்ச்சி காரணமாக இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் உடனடி ஆபத்து உள்ளது எனக் குடியரசுத்தலைவர் தெளிவுறக் காண்பாராயின், அவர், அத்தகைய போர் அல்லது ஆக்கிரமிப்பு அல்லது கிளர்ச்சி உள்ளபடியே நிகழ்வதற்கு முன்பேகூட, அவ்வாறான உடனடி ஆபத்து விளைந்துள்ளது என விளம்புகிற நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்றைப் பிறப்பிக்கலாம்.

(2) (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட ஒரு சாற்றாணை பிந்திய சாற்றாணை ஒன்றினால் மாறுதலோ முறித்தறவோ செய்யப்படலாம்.

(3) (1) ஆம் கூறின்படியான ஒரு சாற்றாணையை அல்லது அத்தகைய சாற்றாணையை மாறுதல் செய்கிற ஒரு சாற்றாணையை அத்தகைய சாற்றாணை ஒன்று பிறப்பிக்கப்படலாம் என்கிற ஒன்றியத்து அமைச்சரவையின் (அதாவது, 75ஆம் உறுப்பின்படி அமர்த்தப்பெற்ற தலைமை அமைச்சரையும் அமைச்சரவைப் படிநிலையிலுள்ள பிற அமைச்சர்களையும் கொண்ட அமைச்சரவையின்) முடிவு எழுத்துவடிவில் குடியரசுத்தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவர் பிறப்பித்தல் ஆகாது.

(4) இந்த உறுப்பின்படி பிறப்பிக்கப்படும் சாற்றாணை ஒவ்வொன்றும் நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் முன்னிடப்படுதல் வேண்டும்; மேலும், முந்திய சாற்றாணையை முறித்தறவு செய்வதல்லாத சாற்றாணை எதுவும், ஒரு மாதக் காலஅளவு கழிவுறுவதற்கு முன்பே, நாடாளுமன்ற ஈரவைகளும் தீர்மானங்கள் வாயிலாக அதற்கு ஒப்பேற்பு அளித்திருந்தாலன்றி, அக்காலஅளவு கழிவுற்றதும், செயற்பாடு அற்றுப்போகும்:

வரம்புரையாக: முந்திய சாற்றாணையை முறித்தறவு செய்வதல்லாத) சாற்றாணை எதுவும், மக்களவை கலைக்கப்பட்டிருக்கும் காலத்தின்போது பிறப்பிக்கப்படுகிறது என்றாலும் அல்லது இந்தக் கூறில் சுட்டப்பட்ட ஒரு மாதக் காலஅளவின்போது மக்களவையின் கலைப்பு நிகழ்கிறது என்றாலும், அச்சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்து, ஆனால், அக்காலஅளவு கழிவுறுவதன் முன்பு அச்சாற்றாணை பொறுத்த தீர்மானம் எதுவும் மக்களவையால் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், மக்களவை, அதன் மறுஅமைப்புக்குப் பின்பு முதன்முறையாக அமரும் தேதியிலிருந்து முப்பது நாள் கழிவுறுவதற்கு முன்பு அச்சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கும் தீர்மானம் ஒன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டிருந்தாலன்றி, அச்சாற்றாணை, அத்தேதியிலிருந்து முப்பது நாள் காலஅளவு கழுவுற்றதும் செயற்பாடு அற்றுப்போகும்.

(5) மேற்கண்டவாறு ஒப்பேற்பளிக்கப்பட்ட சாற்றாணை ஒன்று முறித்தறவு செய்யப்பட்டாலன்றி, (4)ஆம் கூறின்படி அச்சாற்றாணைக்கு ஒப்பேற்பளிக்கிற தீர்மானங்களில் இரண்டாம் தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து ஆறு மாதக் காலஅளவு கழிவுறுவதன்மேல், அது செயற்பாடு அற்றுப் போகும்:

வரம்புரையாக: அத்தகைய சாற்றாணை ஒன்று தொடர்ந்து செல்லாற்றலில் இருந்து வருவதற்கு ஒப்பேற்பளிக்கும் ஒரு தீர்மானம், நாடாளுமன்ற ஈரவைகளாலும் நிறைவேற்றப்படுமாயின், அவ்வாறு நிறைவேற்றப்படுந்தோறும், அந்தச் சாற்றாணை முறித்தறவு செய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தக் கூறின்படி பிறவாறு அது செயற்பாடு அற்றுப்போயிருக்கும் தேதியிலிருந்து மேற்கொண்டும் ஓர் ஆறு மாதக் காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/190&oldid=1469048" இலிருந்து மீள்விக்கப்பட்டது