பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


வரம்புரையாக: நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று, இந்திய ஆட்சிநிலவரையின் ஒரு பகுதியில் மட்டுமே செயற்பாட்டில் இருக்குமிடத்து—

(i) (அ) கூறின்படி பணிப்புரைகள் இடுவதற்கு ஒன்றியத்திற்குள்ள ஆட்சி அதிகாரமும்,
(ii) (ஆ) கூறின்படி சட்டங்களியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும்,

நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலுள்ள இந்திய ஆட்சிநிலவரையின் அப்பகுதியில் நடைபெறும் அல்லது அதன் தொடர்பாக நடைபெறும் செயல்களால், இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதனின் பாதுகாப்பிற்கும் ஆபத்து எழுமாயின், அவ்வாறு எழும் அளவிற்கு, நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலிருக்கிற மாநிலமாகவோ அதன் பகுதி எதுவுமாகவோ இல்லாத பிற மாநிலம் எதனையுங்கூட அளாவி நிற்கும்.

354. நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால் வருவாய்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான வகையங்கள் பொருந்துறுதல் :

(1) நெருக்கடிநிலைச் சாற்றாணை ஒன்று செயற்பாட்டில் இருக்குங்கால், குடியரசுத் தலைவர், ஆணையின்வழி, 268 முதல் 279 வரையுள்ள உறுப்புகளின் வகையங்கள் அனைத்தும் அல்லது அவற்றில் எதுவும், தாம் தக்கதெனக் கருதும் விதிவிலக்குகள் அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு எந்நேர்விலும், அந்தச் சாற்றாணை செயற்பாடு அற்றுப்போகும் நிதியாண்டு முடிவடையும் காலத்திற்கு மேற்படாமல், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் காலஅளவிற்குச் செல்திறம் உடையன ஆகும் எனப் பணிக்கலாம்.

(2). (1) ஆம் கூறின்படி பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும், அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடுமான விரைவில், நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் முன்னிடப்படுதல் வேண்டும்.

355. அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் மாநிலங்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றியத்திற்குள்ள கடமை :

மாநிலம் ஒவ்வொன்றையும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டுக் குழப்பத்திலிருந்தும் பாதுகாப்பதும், இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க ஒவ்வொரு மாநில அரசாங்கத்தையும் நடத்திச் செல்வதை உறுதிசெய்வதும் ஒன்றியத்தின் கடமை ஆகும்.

356. மாநிலங்களில் அரசமைப்பின் இயங்குமுறை செயலற்றுப்போகும் நேர்வில், அதற்கான ஏற்பாடுகள் :

(1) குடியரசுத்தலைவர், ஒரு மாநில ஆளுநரிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெறுவதன்மேல் அல்லது பிறவாறு, இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு இணங்க மாநில அரசாங்கத்தை நடத்திச் செல்ல இயலாத ஒரு நிலைமை எழுந்துள்ளதெனத் தெளிவுறக்காண்பாராயின், குடியரசுத்தலைவர் ஒரு சாற்றாணையின் வழி—

(அ) அந்த மாநில அரசாங்கத்தின் செயற்பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும், அந்த மாநில ஆளுநரிடம் அல்லது அந்த மாநிலத்திலுள்ள அந்த மாநிலச் சட்டமன்றம் அல்லாத பிற குழுமம் அல்லது அதிகாரஅமைப்பு எதனிடமும் உற்றமைந்த அல்லது அவர்களால் செலுத்தப்படுவதாகும் அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் தாமே மேற்கொள்ளலாம்;
(ஆ) அந்த மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரங்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தாலோ அதன் வழியாலோ செலுத்தப்படுவதாகும் என விளம்பலாம்;
(இ)அந்த மாநிலத்திலுள்ள குழுமம் அல்லது அதிகாரஅமைப்பு தொடர்பாக உள்ள இந்த அரசமைப்பின் வகையங்களில் எதன் செயற்பாட்டையும் முழுவதுமாகவோ பகுதியாகவோ தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கலாக, இந்தச் சாற்றாணையின் நோக்கங்களைச் செயற்படுத்துவற்குத் தேவையென அல்லது உகந்தவையெனக் குடியரசுத்தலைவருக்குத் தோன்றும் சார்வுறு மற்றும் விளைவுறு ஏற்பாடுகளைச் செய்யலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/192&oldid=1469046" இலிருந்து மீள்விக்கப்பட்டது