பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


(5). (4) ஆம் கூறில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், (3)ஆம் கூறின்படி ஒப்பேற்பளிக்கப்பட்ட ஒரு சாற்றாணையை, அச்சாற்றாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு கழிவுற்ற பின்னரும் ஒரு காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவருமாறு செய்வதற்கான ஒரு தீர்மானம்

(அ) அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, இந்தியா முழுவதிலும் அல்லது, நேர்வுக்கேற்ப, மாநிலம் முழுவதிலும் அல்லது அதன்பகுதி எதிலும், ஒரு நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டில் இருந்தாலன்றியும்,
(ஆ) தொடர்புடைய மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குப் பொதுத் தேர்தல்கள் நடத்துவதில் எழும் இடர்ப்பாடுகள் காரணமாக, (3)ஆம் கூறின்படி ஒப்பேற்பளிக்கப்பட்ட சாற்றாணை அத்தகைய தீர்மானத்தில் குறித்துரைக்கப்படும் காலஅளவுக்குத் தொடர்ந்து செல்லாற்றலில் இருத்தல் தேவையாகிறது எனத் தேர்தல் ஆணையம் உறுதிச்சான்றளித்தாலன்றியும்

நாடாளுமன்ற ஈரவைகளில் எதனாலும் நிறைவேற்றப்படுதல் ஆகாது:

வரம்புரையாக: இந்தக் கூறிலுள்ள எதுவும், பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்து, 1987 மே 11 ஆம் நாளன்று, (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணைக்குப் பொருந்துறுதல் ஆகாது.

357. 356ஆம் உறுப்பின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையின் வழி சட்டமியற்றும் அதிகாரங்களைச் செலுத்துதல் :

(1) 356ஆம் உறுப்பின் (1)ஆம் கூறின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையின் வழி, ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரங்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தாலோ அதன்வழியாலோ செலுத்தப்படுவதாகும் என்று விளம்புகை செய்யப்படுகிறவிடத்து—

(அ) சட்டங்கள் இயற்றுவதற்கான அந்த மாநிலச் சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் குடியரசுத்தலைவருக்கு வழங்கவும், அவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தாம் பொருத்தமெனக் கருதி விதிக்கும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு, அதன்பொருட்டுத் தாம் குறித்துரைக்கும் பிற அதிகாரஅமைப்பு எதற்கும் ஒப்படைவு செய்வதற்குக் குடியரசுத்தலைவருக்கு அதிகாரமளிக்கவும் நாடாளுமன்றத்திற்குத் தகுதிறம் உண்டு;
(ஆ) ஒன்றியத்திற்கு அல்லது அதன் அலுவலர்களுக்கும் அதிகாரஅமைப்புக்கும் அதிகாரங்களை வழங்குதல், கடமைகளை.. விதித்தல் ஆகியவற்றிற்கான சட்டங்களையும், அதிகாரங்களை வழங்கவும் கடமைகளை விதிக்கவும் அதிகாரமளிப்பதற்கான சட்டங்களையும் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அல்லது (அ) உட்கூறின்படி சட்டங்கள் இயற்றுவதற்கான அத்தகைய அதிகாரம் உற்றமைந்திருக்கிற குடியரசுத்தலைவருக்கும் பிற அதிகாரஅமைப்பிற்கும் தகுதிறம் உண்டு;
(இ)மக்களவையின் கூட்டத்தொடர், தொடர்நிலையில் இல்லாதிருக்கும்போது, நாடாளுமன்றம், மாநிலத் திரள்நிதியத்திலிருந்து செய்யப்படும் செலவினத்திற்கு ஒப்பளிப்பு வழங்கும் வரையில், அச்செலவினம் பொறுத்து அதிகாரமளிப்பதற்குக் குடியரசுத்தலைவருக்குத் தகுதிறம் உண்டு.

(2) நாடாளுமன்றத்திற்கு அல்லது குடியரசுத்தலைவருக்கு அல்லது (1) ஆம் கூறின் (அ) உட்கூறில் சுட்டப்பட்ட பிற அதிகாரஅமைப்பிற்கு 356ஆம் உறுப்பின்படி பிறப்பிக்கப்பட்ட சாற்றாணையின்வழி மாநிலச் சட்டமன்றத்தின் சட்டமியற்று அதிகாரம் அளிக்கப்பட்டு, அதன்படி நாடாளுமன்றம் அல்லது குடியரசுத்தலைவர் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதுவும் சட்டம் இயற்றியிருப்பின், அச்சட்டமானது அச்சாற்றாணை செயற்பாட்டிலிருப்பது அற்றுப்போனதன் பின்பும் ஒரு தகுதிறமுள்ள சட்டமன்றத்தினால் அல்லது பிற அதிகார அமைப்பினால் மாற்றமோ நீக்கறவோ திருத்தமோ செய்யப்படும்வரையில், தொடர்ந்து செல்லாற்றலில் இருந்துவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/194&oldid=1469041" இலிருந்து மீள்விக்கப்பட்டது