பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179



பகுதி xx

அரசமைப்பின் திருத்தம்

368. அரசமைப்பினைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும் அதற்கான நெறிமுறையும்:

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், இந்த உறுப்பில் விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைக்கு இணங்க, நாடாளுமன்றம், தனது அரசமைப்பியற்று அதிகாரத்தைச் செலுத்தி, இந்த அரசமைப்பின் வகையம் எதிலும் சேர்த்தல், மாறுதல் செய்தல் அல்லது எதனையும் நீக்கறவு செய்தல் வாயிலாகத் திருத்தம் செய்யலாம்.

(2) இந்த அரசமைப்பின் திருத்தம் எதுவும், அதற்கென ஒரு சட்ட முன்வடிவை நாடாளுமன்ற ஈரவைகளில் ஒன்றில் அறிமுகப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே தொடங்குறப்பெறும்; அச்சட்டமுன்வடிவு, ஒவ்வோர் அவையிலும் அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையும், மேலும், அந்த அவை உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையும் கொண்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதன்மேல், அது குடியரசுத்தலைவரிடம் முன்னிடப்படுதல் வேண்டும்; அவர் அச்சட்டமுன்வடிவிற்கு ஏற்பிசைவு அளிப்பார்; அதன்மேல் அச்சட்ட முன்வடிவில் கண்ட வரைவுரைகளுக்கு இணங்க அரசமைப்பு திருத்தம் பெற்றது ஆகும்:

வரம்புரையாக: அத்தகைய திருத்தம்

(அ) 54ஆம் உறுப்பு, 55 ஆம் உறுப்பு, 73 ஆம் உறுப்பு, 162ஆம் உறுப்பு அல்லது 241ஆம் உறுப்பு, அல்லது
(ஆ) V ஆம் பகுதியின் IVஆம் அத்தியாயம், VIஆம் பகுதியின் V ஆம் அத்தியாயம், அல்லது XI ஆம் பகுதியின் 1 ஆம் அத்தியாயம், அல்லது
(இ) ஏழாம் இணைப்புப்பட்டியலில் உள்ள பட்டியல்களில் ஒன்று, அல்லது
(ஈ) நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்குள்ள சார்பாற்றம், அல்லது
(உ) இந்த உறுப்பின் வகையங்கள்

ஆகியவற்றில் மாற்றம் எதனையும் செய்ய முற்படுமாயின், அத்திருத்தத்திற்கு வகைசெய்யும் சட்டமுன்வடிவு, குடியரசுத்தலைவரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுவதற்கு முன்பு, அத்திருத்தமானது, மாநிலங்களில் ஒரு பாதிக்குக் குறையாதவற்றின் சட்டமன்றங்களால் அதுகுறித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வாயிலாக ஏற்புறுதி செய்யப்படுவதும் வேண்டுறுவதாகும்.

(3). 13 ஆம் உறுப்பிலுள்ள எதுவும் இந்த உறுப்பின்படி செய்யப்படும் திருத்தம் எதற்கும் பொருந்துறுவதில்லை.

(4). 1976 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் 55 ஆம் பிரிவின் தொடக்கநிலைக்கு முன்போ பின்போ இந்த உறுப்பின்படி செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிற (III ஆம் பகுதியின் வகையங்கள் உள்ளடங்கலாக) இந்த அரமைப்பின் திருத்தம் எதுவும் எக்காரணத்தைக் கொண்டும் நீதிமன்றம் எதிலும் எதிர்த்து வாதிடப்படுதல் ஆகாது.

(5) இந்த உறுப்பின்படி சேர்த்தல், மாறுதல் செய்தல் அல்லது நீக்கறவு செய்தல் வாயிலாக இந்த அரசமைப்பின் வகையங்களில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அரசமைப்பியற்று அதிகாரத்தின்மீது எந்தவிதமான வரையிறுத்தமும் இருத்தல் ஆகாது என ஈங்கிதனால் ஐயப்பாடுகளை அகற்றும் வகையில் விளம்பப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/205&oldid=1469057" இலிருந்து மீள்விக்கப்பட்டது