பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


பகுதி XXI

தற்காலிகமான, மாறும் இடைக்காலத்திற்கான மற்றும் தனியுறு வகையங்கள் 369. மாநிலப் பட்டியலிலுள்ள குறித்தசில பொருட்பாடுகளைப் பொறுத்து அவை ஒருங்கியல் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளாக இருந்தாற்போன்றே சட்டங்கள் இயற்றவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள தற்காலிக அதிகாரம்:

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், நாடாளுமன்றம் இந்த அரசமைப்பின் தொடக்கநிலையிலிருந்து ஐந்து ஆண்டுக் காலஅளவின்போது, பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து, அவை ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்டுள்ள பொருட்பாடுகளாக இருந்தாற்போன்றே, சட்டங்கள் இயற்றுவதற்கு அதிகாரம் உடையது ஆகும்.

(அ) பருத்தி மற்றும் கம்பளி நெசவங்கள் (கொட்டை நீக்கப்பட்ட பருத்தி மற்றும் கொட்டை நீக்கப்படாத பருத்தி அல்லது கழிவுப் பருத்தி உள்ளடங்கலான) கச்சாப் பருத்தி, பருத்திக் கொட்டை (செய்தியிதழ், அச்சுத்தாள் உள்ளடங்கலான) தாள், (உண்தகு எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் உள்ளடங்கலான) உணவுப்பொருட்கள், (பிண்ணாக்குகளும் பிற செறிமங்களும் உள்ளடங்கலான) கால்நடைத் தீவனம், (கல்கரி மற்றும் நிலக்கரியின் வழிப்பொருட்கள் உள்ளடங்கலான) நிலக்கரி, இரும்பு, உருக்கு, அப்பிரகம் ஆகியவற்றில், ஒரு மாநிலத்திற்குள் நடைபெறும் வணிகமும் வாணிபமும்; மேலும், அவற்றின் உற்பத்தி, வழங்கீடு, பகிர்ந்தளிப்பு ஆகியவை;

(ஆ) (அ) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்த சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், அப்பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்து உச்ச நீதிமன்றம் தவிர்த்து, பிற நீதிமன்றங்கள் அனைத்தின் அதிகாரவரம்பும் அதிகாரங்களும், மற்றும் அப்பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்து, நீதிமன்றம் எதிலும் பெறப்படும் கட்டணங்கள் நீங்கலான பிற கட்டணங்கள்;

ஆனால், இந்த உறுப்பின் வகையங்கள் இல்லாதிருந்தால் எவ்வகைச் சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றம் தகுதிறம் கொண்டிருக்காதோ அவ்வகைச் சட்டம் எதனையும் நாடாளுமன்றம் இயற்றியிருக்குமாயின், அந்தச் சட்டம், மேற்சொன்ன காலஅளவு கழிவுற்றதும், நாடாளுமன்றத்தின் தகுதிறமின்மையின் அளவுக்குச் செல்திறம் அற்றுப்போகும்; எனினும், அக்காலஅளவு கழிவுறுவதற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எதுவும் பாதிக்கப்படுவதில்லை.

370. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பொறுத்த தற்காலிக வகையங்கள்:

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்

(அ) 238 ஆம் உறுப்பின் வகையங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்பாகப் பொருந்துறுவதில்லை;


(ஆ) மேற்சொன்ன மாநிலத்திற்குச் சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம் பின்வரும் வரம்பிற்குள் அடங்கியதாக இருக்கும்;

(i) இந்தியத் தன்னாட்சியத்துடன் அந்த மாநிலத்தின் இணைப்பை நெறிப்படுத்தும் இணைப்பு முறையாவணத்தில் தன்னாட்சியச் சட்டமன்றம் அந்த மாநிலத்தைப் பொறுத்துச் சட்டங்கள் இயற்றலாம் எனக் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளுக்கு நேரிணையானவை என்று ஒன்றியத்துப் பட்டியலிலும் ஒருங்கியல் பட்டியலிலும் உள்ள பொருட்பாடுகளில் எவற்றை அந்த மாநில அரசாங்கத்துடன் கலந்தாய்வு செய்த பின்பு குடியரசுத்தலைவர் விளம்புகின்றாரோ அந்தப் பொருட்பாடுகள்; மற்றும்

(ii) அந்த மாநில அரசாங்கத்தின் ஒருங்கிசைவுடன், குடியரசுத்தலைவர் ஆணையின்வழி குறித்துரைக்கும் மேற்சொன்ன பட்டியல்களிலுள்ள பிற பொருட்பாடுகள்.

31-4--52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/206&oldid=1469058" இலிருந்து மீள்விக்கப்பட்டது