பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


விளக்கம்.-இந்த உறுப்பினைப் பொறுத்தவரை, அந்த மாநிலத்தின் அரசாங்கம் என்பது, 1948 மார்ச் ஐந்தாம் தேதியிட்ட ஜம்மு-காஷ்மீர் மகாராஜாவின் சாற்றாணையின்படி அப்போதைக்குப் பதவியிலுள்ள அமைச்சரவையின் தேர்வுரையின்மீது செயலுறுகின்ற அதன் மகாராஜாவாகக் குடியரசுத்தலைவரால் அப்போதைக்கு ஏற்பளிக்கப்பட்டுள்ள ஒருவர் என்று பொருள்படும்.

(இ) 1ஆம் உறுப்பின் வகையங்களும் இந்த உறுப்பின் வகையங்களும் அந்த மாநிலம் தொடர்பாகப் பொருந்துறுவன ஆகும்;

(ஈ) குடியரசுத்தலைவர் ஆணையின்வழி குறித்துரைக்கும் இந்த அரசமைப்பின் பிற வகையங்கள், அவர், அந்த ஆணையின்வழி குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு அந்த மாநிலம் தொடர்பாகப் பொருந்துறுவன ஆகும்: வரம்புரையாக: அந்த மாநில அரசாங்கத்துடன் கலந்தாய்வு செய்த பின்பு அன்றி, (ஆ) உட்கூறின் (i) ஆம் பத்தியில் சுட்டப்பட்டுள்ள அந்த மாநிலம் இணைவதற்கான முறையாவணத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்பாடுகள் தொடர்பான அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: கடைசி முந்திய வரம்புரையில் சுட்டப்பட்டவை அல்லாத பிற பொருட்பாடுகள் தொடர்பான ஆணை எதுவும், அந்த அரசாங்கத்தின் ஒருங்கிசைவுடன் அல்லாமல் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

(2). (1) ஆம் கூறின் (ஆ) உட்கூறின் (ii) ஆம் பத்தியில், அல்லது அந்தக் கூறின் (ஈ) உட்கூறின் இரண்டாம் வரம்புரையில் சுட்டப்பட்டுள்ள அந்த மாநில அரசாங்கத்தின் ஒருங்கிசைவானது, அந்த மாநிலத்தின் அரசமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காக அரசமைப்புப் பேரவை கூட்டப்படுவதற்கு முன்பே கொடுக்கப்பட்டிருப்பின், அத்தகைய பேரவை அதன்மீது எடுக்கும் முடிபுக்கென அப்பேரவையில் அது வைக்கப்படும்.

(3) இந்த உறுப்பின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், பொது அறிவிக்கை வாயிலாக, தாம் குறித்துரைக்கும் தேதியிலிருந்து இந்த உறுப்பு செயற்படுவது அற்றுப்போகும் என்றோ அவ்வாறு குறித்துரைக்கும் விதிவிலக்குகளுடனும் மாற்றமைவுகளுடனும் மட்டுமே செயற்படும் என்றோ விளம்பலாம்:

வரம்புரையாக: குடியரசுத்தலைவர் அத்தகைய ஓர் அறிவிக்கையைப் பிறப்பிப்பதற்கு முன்பு, (2)ஆம் கூறில் சுட்டப்பட்டுள்ள அந்த மாநிலத்தின் அரசமைப்புப் பேரவையின் பரிந்துரை அவசியமாகும்.

371. மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைப் பொறுத்த தனியுறு வகையகங்கள்:

(1) 1[* * * ]

(2) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிப்பினும், குடியரசுத்தலைவர், மகாராஷ்டிரம் அல்லது குஜராத் மாநிலம் பொறுத்துத் தாம் பிறப்பிக்கும் ஆணையின்வழி

(அ) விதர்பா, மராத்வாடா, மகாராஷ்டிரத்தின் எஞ்சிய பகுதி ஆகியவற்றிற்காக அல்லது, நேர்வுக்கேற்ப, சௌராஷ்டிரம், கட்சு, குஜராத்தின் எஞ்சிய பகுதி ஆகியவற்றிற்காக, தனித்தனியாக வளர்ச்சி வாரியங்களை, அவ்வாரியங்கள் ஒவ்வொன்றின் செயல்முறை பற்றிய அறிக்கை ஒன்று ஆண்டுதோறும் மாநிலச் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படும் என்னும் வகையத்துடன், நிறுவுவதற்காகவும்,

(ஆ) அந்த மாநிலம் முழுவதற்குமான தேவைகளுக்கு உட்பட்டு, மேற்சொன்ன பரப்பிடங்களின் வளர்ச்சிக்குரிய செலவினத்திற்கான நிதிகளை நேரிய முறையில் பகிர்ந்தொதுக்குவதற்காகவும்,

(இ) அந்த மாநிலம் முழுவதற்குமான தேவைகளுக்கு உட்பட்டு, மேற்சொன்ன அனைத்துப் பரப்பிடங்களையும் பொறுத்து, தொழில் நுட்பக் கல்வி, உறுதொழில் பயிற்சி ஆகியவற்றிற்குப் போதிய வசதிகளையும், மாநில அரசாங்கத்தின் கட்டாள்கையின்கீழுள்ள பணியங்களில் வேலையமர்த்தத்திற்குப் போதிய வாய்ப்புநலன்களையும் அளிக்கும் ஒரு நேரிய ஏற்பாடு செய்வதற்காகவும் ஆளுநருக்குத் தனிப்பொறுப்பு எதுவும் அளித்து வகைசெய்யலாம். ______________________________________________ 1 1973ஆம் ஆண்டு அரசமைப்பு (முப்பத்திரண்டாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (1-7-1974 முதல் செல்திறம் பெறுமாறு) விட்டுவிடப்பட்டது.

31-4-52a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/207&oldid=1469064" இலிருந்து மீள்விக்கப்பட்டது