பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182


371அ. நாகாலாந்து மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும்,

(அ)

(i) நாகர்களின் சமய அல்லது சமுதாய ஒழுகலாறுகள்,
(ii) நாகர் மரபுவழக்குச் சட்டம் மற்றும் நெறிமுறை,
(iii) நாகர் மரபுவழக்குச் சட்டத்தின்படியான முடிபுகள் உள்ளடங்கிய உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி நிருவாகம்,
(iv) நிலத்தின் சொத்துரிமை, உரிமைமாற்றம் மற்றும் அதன் வள ஆதாரங்கள்

ஆகியவை பொறுத்த நாடாளுமன்றச் சட்டம் எதுவும், நாகாலாந்து மாநிலச் சட்டமன்றப் பேரவை ஒரு தீர்மானத்தின் வாயிலாக நாகாலாந்து மாநிலத்திற்குப் பொருந்துறுதல் வேண்டும் என முடிபு செய்திருந்தாலன்றி, அவ்வாறு பொருந்துறுதல் ஆகாது;

(ஆ) நாகாலாந்து ஆளுநர், அந்த மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு ஒட்டிமுன்பு, நாகர் குன்றுகள்-துயென்சாங் பரப்பிடத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் குழப்பங்கள், அதில் அல்லது அதன் பகுதி எதிலும் தொடர்ந்து நிகழ்வதாகக் கருதப்படுகிற காலம் வரையில், நாகாலாந்து மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பொறுத்துத் தனிப் பொறுப்பு உடையவர் ஆவார்; மேலும், அது தொடர்பாகத் தம் பதவிப்பணிகளை ஆற்றுகையில், ஆளுநர், தாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவையைக் கலந்தாய்வு செய்த பின்பு, தாம் முடிபு செய்கிறபடியே செயற்படுவார்:

வரம்புரையாக: பொருட்பாடு ஒன்று, ஆளுநர் தாமே முடிபு செய்கிறபடியே செயற்படுமாறு வேண்டுறுத்தப்பட்டதா இல்லையா என்பதைப் பொறுத்துப் பிரச்சினை எதுவும் எழுமாயின், ஆளுநர், தம் உளத்தேர்வின்படி செய்யும் முடிபே அறுதியானது ஆகும்; மேலும், ஆளுநர், தாமே முடிபு செய்கிறபடி செயற்பட்டிருக்க வேண்டும் அல்லது கூடாது என்பதைக் காரணமாகக் காட்டி, அவரால் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மையையும் எதிர்த்து வாதிடுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக: குடியரசுத்தலைவர், ஆளுநரிடமிருந்து ஓர் அறிக்கையைப் பெற்றதன்மேல் அல்லது பிறவாறு, நாகாலாந்து மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பொறுத்து ஆளுநர் தனிப் பொறுப்பு உடையவராக இருப்பது இனிமேற்கொண்டு தேவையில்லை என்று தெளிவுறக் காண்பாராயின், அவர், ஆணையின்வழி, அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் தேதியிலிருந்து செல்திறம் பெறுமாறு, ஆளுநர் அத்தகைய பொறுப்பு உடையவராயிருப்பது அற்றுப்போகும் என்று பணிக்கலாம்;

(இ)நாகாலாந்து ஆளுநர், ஒரு மானியத்திற்கான கோரிக்கை எதனையும் பொறுத்துத் தமது பரிந்துரைகளைச் செய்கையில், குறிப்பிட்ட பணியம் அல்லது நோக்கம் எதற்கும் இந்தியத் திரள்நிதியத்திலிருந்து இந்திய அரசாங்கத்தினால் அளிக்கப்படும் பணத்தொகை எதுவும், பிற கோரிக்கை எதிலும் சேர்க்கப்படாமல், அந்தப் பணியம் அல்லது நோக்கம் தொடர்பான ஒரு மானியத்திற்கான கோரிக்கையிலேயே சேர்க்கப்படுமாறு செய்வார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/208&oldid=1469065" இலிருந்து மீள்விக்கப்பட்டது