பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


(ஈ) நாகாலாந்து ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, இதன்பொருட்டு குறித்துரைக்கும் தேதியிலிருந்து, துயென்சாங் மாவட்டத்திற்கென முப்பத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட வட்டார மன்றம் ஒன்று அமைக்கப்படும்; மேலும், ஆளுநர் தமது உளத்தேர்வின்படி பின்வருவனவற்றுக்கு விதிகள் வகுப்பார்:

(i) வட்டார மன்றத்தின் கட்டமைப்பு, அந்த வட்டார மன்றத்தின் உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்கும் முறை:

வரம்புரையாக: துயென்சாங் மாவட்டத்தின் துணை ஆணையர், அந்த வட்டார மன்றத்தின் பதவிவழித் தலைவராக இருப்பார்; மேலும், அந்த வட்டார மன்றத்தின் உறுப்பினர்கள், தங்களிடமிருந்து அதன் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்;

(ii) வட்டார மன்றத்தின் உறுப்பினர்களாகத் தெரிந்தெடுக்கப்படுவதற்கும் உறுப்பினர்களாக இருப்பதற்குமான தகுதிப்பாடுகள்;
(iii) வட்டார மன்றத்தின் பதவிக்காலம், அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரையூதியங்களும் படித்தொகைகளும், எவையேனுமிருப்பின், அவை;
(iv) வட்டார மன்றத்தின் அலுவல் நெறிமுறை; அதன் அலுவல் நடத்துமுறை;
(v) வட்டார மன்றத்தின் அலுவலர்களையும் பணியாளர் தொகுதியினையும் அமர்த்துதல்; மேலும் அவர்களுடைய பணிவரைக்கட்டுகள்; மற்றும்
(vi) வட்டார மன்றத்தை அமைப்பதற்கும் அது முறையாகச் சொயலாற்றுவதற்கும் விதிகள் வகுப்பது பொறுத்துத் தேவைப்படுகிற பிற பொருட்பாடு எதுவும்.

(2) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், நாகாலாந்து மாநிலம் தேதியிலிருந்து பத்து ஆண்டுக் காலஅளவுக்கு அல்லது ஆளுநர், வட்டார மன்றத்தின் பரிந்துரையின்மீது, இதன்பொருட்டு பொது அறிவிக்கை வாயிலாகக் குறித்துரைக்கும் கூடுதலான காலஅளவிற்கு-

(அ) துயென்சாங் மாவட்டத்தின் நிருவாகம், ஆளுநரால் நடத்தப் பெறுதல் வேண்டும்;

(ஆ) நாகாலாந்து மாநிலம் - முழுவதற்குமான தேவைகளை நிறைவுறுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் நாகாலாந்து அரசாங்கத்திற்குப் பணத்தொகை எதுவும் அளிக்கப்படுகிறவிடத்து, ஆளுநர், தமது உளத்தேர்வின்படி, துயென்சாங் மாவட்டத்திற்கும் அந்த மாநிலத்தின் எஞ்சிய பகுதிகளுக்கும் இடையே அந்தப் பணத்தொகையை நேரிய முறையில் பகிர்ந்தொதுக்குவதற்கு ஏற்பாடு செய்வார்;

(இ) ஆளுநர், வட்டார மன்றத்தின் பரிந்துரையின்மீது, பொது அறிவிக்கை வாயிலாக, நாகாலாந்து சட்டமன்றத்தின் சட்டம் எதுவும் துயென்சாங் மாவட்டத்திற்குப் பொருந்துறும் எனப் பணித்தாலன்றி, அச்சட்டம் அவ்வாறு அந்த மாவட்டத்திற்கும் பொருந்துறுவதில்லை மேலும், அத்தகைய சட்டம் எதனையும் பொறுத்து ஆளுநர் அத்தகைய பணிப்புரையை இடுங்கால், அச்சட்டம் துயென்சாங் மாவட்டத்திற்கு அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறுவதில், வட்டார மன்றத்தின் பரிந்துரையின் மீது, ஆளுநர் தாம் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு செல்திறம் பெறும் என்று பணிக்கலாம்:

வரம்புரையாக: இந்த உட்கூறின்படி இடப்படும் பணிப்புரை எதுவும், முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்;

(ஈ) ஆளுநர், துயென்சாங் மாவட்டத்தின் அமைதி, முன்னேற்றம், தன்னாட்சி ஆகியவற்றிற்காக ஒழுங்குறுத்தும் விதிகளை வகுக்கலாம்; மேலும், அவ்வாறு வகுக்கப்படும் ஒழுங்குறுத்தும் விதிகள், நாடாளுமன்றச் சட்டம் எதனையும் அல்லது அந்த மாவட்டத்திற்கு அப்போதைக்குப் பொருந்துறுகிற பிற சட்டம் எதனையும், தேவைப்படுமாயின் முன்மேவு செல்திறம் பெறுமாறு நீக்கறவு செய்யலாம் அல்லது திருத்தம் செய்யலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/209&oldid=1469864" இலிருந்து மீள்விக்கப்பட்டது