பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184


(உ)

(i) நாகாலாந்து சட்டமன்றப் பேரவையில் துயென்சாங் மாவட்டத்தைத் சார்பாற்றம் செய்கின்ற உறுப்பினர்களில் ஒருவர் ஆளுநரால், முதலமைச்சரின் தேர்வுரையின் பேரில், துயென்சாங் அலுவற்பாடுகளுக்கான அமைச்சராக அமர்த்தப்பெறுவார்; மேலும், முதலமைச்சர் தமது தேர்வுரையை வழங்குங்கால், மேற்சொன்ன உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் பரிந்துரையின்மீது செயலுறுவார்;
(ii) துயென்சாங் அலுவற்பாடுகளுக்கான அமைச்சர், துயென்சாங் மாவட்டம் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பார்; மேலும், அவற்றைப் பொறுத்து ஆளுநருடன் நேரடித் தொடர்பு கொண்டு இயங்குவார்; ஆனால், அது குறித்து அவர் முதலமைச்சருக்குத் தெரிவித்து வருதல் வேண்டும்;

(ஊ) இந்தக் கூறின் மேலே கண்ட வகையங்களில் எது எவ்வாறிருப்பினும், துயென்சாங் மாவட்டம் தொடர்பான பொருட்பாடுகள் அனைத்தையும் பற்றிய அறுதியான முடிவினை ஆளுநர் தமது உளத்தேர்வின்படி எடுப்பார்;
(எ) 54,55 ஆகிய உறுப்புகளிலும், 80 ஆம் உறுப்பின்(4)ஆம் கூறிலும், ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களை அல்லது அத்தகைய உறுப்பினர் ஒவ்வொருவரையும் பற்றிய சுட்டுகைகள், இந்த உறுப்பின்படி நிறுவப்பெற்ற வட்டார மன்றத்தால் நாகாலாந்து சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களையும் அல்லது உறுப்பினரையும் சுட்டுவதாகும்;
(ஏ) 170ஆம் உறுப்பில்}}

(i) (1) ஆம் கூறு, நாகாலாந்து சட்டமன்றப் பேரவை தொடர்பாக, “அறுபது” என்னும் சொல்லுக்கு மாற்றாக "நாற்பத்தாறு" என்னும் சொல் அமைக்கப்பட்டிருந்தாற்போன்று செல்திறம் பெறும்;
(ii)மேற்சொன்ன கூறில், அந்த மாநிலத்திலுள்ள நிலவரைத் தேர்தல் தொகுதி களிலிருந்தான தேரடித் தேர்தல் பற்றிய சுட்டுகை, இந்தக் கூறின்படி நிறுவப் பெற்ற வட்டார மன்றத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் தேர்தலையும் சுட்டுவதாகும்;
(iii) (2), (3) ஆகிய கூறுகளில் நிலவரைத் தேர்தல்தொகுதிகள்பற்றிய சுட்டுகைகள், கோஹிமா, மோகோக்சுங் ஆகிய மாவட்டங்களிலுள்ள நிலவரைத் தேர்தல் தொகுதிகளையும் சுட்டுவதாகப் பொருள்படும்.

(3) இந்த உறுப்பின் மேலேகண்ட வகையங்களில் எதனையும் செல்திறப்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமாயின், குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, அந்த இடர்ப்பட்டினை அகற்றுவதற்குத் தேவையெனத் தமக்குத் தோன்றுகிற (பிற உறுப்பு எதனின் தழுவமைவு அல்லது மாற்றமைவு உள்ளடங்கலான) எதனையும் செய்யலாம்:

வரம்புரையாக: நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் கழிவுற்ற பின்பு, அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

விளக்கம். இந்த உறுப்பில், கோஹிமா, மோகோக்சுங், துயென்சாங் ஆகிய மாவட்டங்கள், 1962ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலச் சட்டத்திலுள்ள அதே பொருளினை உடையன ஆகும்.

371ஆ. அசாம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம் :

இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், அசாம் மாநிலம் பொறுத்துத் தாம் பிறப்பிக்கும் ஆணையின்வழி ஆறாம் இணைப்புப்பட்டியலின் 20ஆம் பத்தியில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் 1 ஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள பழங்குடி வரையிடங்களிலிருந்து அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பெறும் உறுப்பினர்களையும், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படும் எண்ணிக்கையுள்ள அப்பேரவையின் பிற உறுப்பினர்களையும் கொண்ட அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் குழு ஒன்றினை அமைப்பதற்கும் அக்குழுவின் செயற்பணிகளுக்கும், அத்தகைய குழுவினை அமைப்பதற்காகவும் அது முறையாகச் செயற்பணியாற்றுவதற்காகவும் அந்தப் பேரவையின் நெறிமுறை விதிகளில் செய்யப்படவேண்டிய மாற்றமைவுகளுக்கும் வகை செய்யலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/210&oldid=1470271" இலிருந்து மீள்விக்கப்பட்டது