பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

இரண்டாம் இணைப்புப்பட்டியல்
[59 (3), 65 (3),75 (6), 97, 125, 148 (3), 158 (3), 164(5), 186, 221 ஆகிய உறுப்புகள்]
பகுதி அ

குடியரசுத்தலைவர் மற்றும் மாநிலங்களின் ஆளுநர்கள் குறித்த வகையங்கள்

1. குடியரசுத்தலைவருக்கும் மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் மாதம் ஒன்றுக்குப் பின்வரும் பதவியூதியங்கள் வழங்கப்படுதல் வேண்டும்:-

குடியரசுத்தலைவர் ** [1]10,000 ரூபாய்

ஒரு மாநிலத்தின் ஆளுநர் ** [2]5,500 ரூபாய்

2. இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, முறையே இந்தியத் தன்னாட்சியத்தின் தலைமை ஆளுநருக்கும் நேரிணையான மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டதான படித்தொகைகள், குடியரசுத்தலைவருக்கும் மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

3. குடியரசுத்தலைவரும் மாநிலங்களின் ஆளுநர்களும் தம் பதவிக்காலங்கள் முழுவதிலும் இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, முறையே தலைமைஆளுநரும் நேரிணையான மாகாணங்களின் ஆளுநர்களும் கொண்டிருந்த மதிப்புரிமைகளுக்கு உரிமைகொண்டவர்கள் ஆவர்.

4. குடியரசுத் துணைத்தலைவர் அல்லது பிறர் எவரும் குடியரசுத்தலைவரின் பதவிப்பணிகளை ஆற்றிவரும்போதோ குடியரசுத்தலைவராகச் செயலுறும் போதோ அல்லது எவர் ஒருவரும் ஆளுநரின் பதவிபணிகளை ஆற்றி வரும் போதோ அவர், குடியரசுத்தலைவராக அல்லது ஆளுநராகப் பதவிப்பணிகளை ஆற்றிவரும்போது அல்லது செயலுறும்போது, அந்தந்தப் பதவிக்குரிய ஊதியங்களையும் படித்தொகைகளையும் மதிப்புரிமைகளையும் பெறுவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.

[பகுதிஆ-1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29 ஆம் பிரிவினாலும் இணைப்புப்பட்டியலினாலும் விட்டுவிடப்பட்டது.]

பகுதி இ

மக்களவைத் தலைவர், துணைத்தலைவர், மாநிலங்களவைத் தலைவர், துணைத் தலைவர், ஒரு மாநிலச் சட்டமன்றப் பேரவைத்தலைவர், துணைத் தலைவர், சட்டமன்ற மேலவைத்தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் குறித்த வகையங்கள் :

7. மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இந்தியத் தன்னாட்சியத்தின் அரசமைப்புப் பேரவைத்தலைவருக்கு வழங்கப்பட்டதான பதவியூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல் வேண்டும்; மேலும், மக்களவைத் துணைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் துணைத்தலைவருக்கும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இந்தியத் தன்னாட்சியத்தின் அரசமைப்புப் பேரவைத் துணைத்தலைவருக்கு வழங்கப்பட்டதான பதவியூதியங்களும் படித்தொகைகளும் வழங்கப்படுதல் வேண்டும்.

  1. 25/1998 சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
  2. 27/1998 சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் ரூ.36,000 ஆக உயர்த்தப்பட்டது (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/228&oldid=1467264" இலிருந்து மீள்விக்கப்பட்டது