பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்துடன் அவ்வாறு குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்திற்கும் அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அவர் பெற்றுவந்த வரையூதியத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அளவிற்குச் சமன்மையான ஒரு தொகையைச் சிறப்பு வரையூதியமாகப் பெறுவதற்கு உரிமைகொண்டவர் ஆவார்.

(3). 1956 ஆம் ஆண்டு அரசமைப்புச் (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருந்து, அத்தகைய தொடக்கநிலையில், அந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட மேற்சொன்ன இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆகியிருக்கிற எவரும், அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அவருடைய வரையூதியத்துடன், படித்தொகையாக ஏதேனும் தொகையைப் பெற்றுவந்திருப்பாராயின், அத்தகைய தலைமை நீதிபதியாக உள்ளபடியே பணியில் இருந்த காலத்தைப் பொறுத்து, இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்துடன், அதே தொகையைப் படித்தொகையாகப் பெறுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

11. இந்தப் பகுதியில், தறுவாயின் தேவை வேறானாலன்றி—

(அ) "தலைமை நீதிபதி" என்னும் சொற்றொடர், செயலமர் தலைமை நீதிபதி ஒருவரை உள்ளடக்கும்; மற்றும் ஒரு “நீதிபதி” என்பது, குறித்தபணி நீதிபதியையும் உள்ளடக்கும்;

(ஆ) "உள்ளபடியான பணி" என்பது—

(i) நீதிபதி ஒருவர், ஒரு நீதிபதிப் பணியை ஆற்றுகிற காலத்தையும் அல்லது குடியரசுத்தலைவரின் வேண்டுகோளின்படி அவர் ஆற்றுவதற்குப் பொறுப்பேற்கும் பிற பதவிப்பணிகளைப் புரிகிற காலத்தையும்,
உள்ளடக்கும்.
(ii) அந்த நீதிபதியின் வாராமை விடுப்புக்காலம் எதுவும் நீங்கலாக உள்ள பருவ விடுமுறைக் காலங்களையும்,
(ii) ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கோ ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றிற்கோ மாற்றுதல் செய்வதால் ஏற்படும் பணிசேர் இடைக்காலத்தையும்

பகுதி உ

இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் குறித்த வகையங்கள்

12(1) இந்தியக் கணக்காய்வர் தலைமைத் தணிக்கையருக்கு மாதம் ஒன்றுக்கு ஒன்பதாயிரம் ரூபாய்[1] என்னும் வீதத்தில் வரையூதியம் வழங்கப்படுதல் வேண்டும்.

(2) இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு, இந்தியத் தலைமைத் தணிக்கையராகப் பதவி வகித்திருந்து, அத்தகைய தொடக்கநிலையில் 377 ஆம் உறுப்பின்படி இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையராக ஆகியிருக்கிற ஒருவர், இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்துடன், அவ்வாறு குறித்துரைக்கப்பட்டுள்ள வரையூதியத்திற்கும், அத்தகைய தொடக்கநிலையை ஒட்டிமுன்பு இந்தியத் தலைமைத் தணிக்கையராக அவர் பெற்றுவந்த வரையூதியத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டின் அளவிற்குச் சமமான ஒரு தொகையைச் சிறப்பு வரையூதியமாகப் பெறுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.

(3) இந்தியக் கணக்காய்வர்-தலைலமைத் தணிக்கையருக்கு வாராமை விடுப்பு, ஓய்வூதியம் ஆகியவை பொறுத்த உரிமைகளும் பிற பணி வரைக்கட்டுகளும் இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஓட்டிமுன்பு இந்தியத் தலைமைத் தணிக்கையருக்குப் பொருந்துறுவனவாக இருந்த வகையங்களுக்கிணங்க இருத்தலோ இருந்துவருதலோ வேண்டும்; மேலும், அந்த வகையங்களில், தலைமை ஆளுநர் பற்றிய சுட்டுகைகள் அனைத்தும் குடியரசுத்தலைவர் பற்றிய சுட்டுகைகளாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

  1. 56/1971 சட்டத்தின் 3 ஆம் பிரிவின் மூலம் இந்த வரையூதியம், உச்ச நீதிமன்ற நீதிபதியின் வரையூதியமான ரூ.30,000 ஆக இருக்கும். (18/1998 சட்டத்தின் 7ஆம் பிரிவினைக் காணவும்.) (1-1-1996 முதல் செல்திறம் பெறுமாறு)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/231&oldid=1467634" இலிருந்து மீள்விக்கப்பட்டது