பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210


ஐந்தாம் இணைப்புப்பட்டியல்
[244(1) ஆம் உறுப்பு]
பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை குறித்த வகையங்கள்
பகுதி அ
பொதுவியல்

1. பொருள்கோள் :

இந்த இணைப்புப்பட்டியலில், தறுவாயின் தேவை வேறானாலன்றி, "மாநிலம்" என்னும் சொல், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்குவதில்லை.

2. பட்டியல் வரையிடங்களில் மாநில ஆட்சி அதிகாரம் :

இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகாரம், அதிலுள்ள பட்டியல் வரையிடங்களை அளாவிநிற்கும்.

3. பட்டியல் வரையிடங்களின் நிருவாகம் பற்றி குடியரசுத்தலைவருக்கு ஆளுநரின் அறிக்கை :

பட்டியல் வரையிடங்களைக் கொண்ட மாநிலம் ஒவ்வொன்றின் ஆளுநரும் ஆண்டுதோறும் அல்லது குடியரசுத்தலைவரால் வேண்டுறுத்தப்படுகிறபோதெல்லாம், அந்த மாநிலத்திலுள்ள பட்டியல் வரையிடங்களின் நிருவாகம் பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளித்தல் வேண்டும்; மேலும், மேற்சொன்ன வரையிடங்களின் நிருவாகம் குறித்து அந்த மாநிலத்திற்குப் பணிப்புரைகள் இடுவதும் ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தில் அடங்கும்.

பகுதி ஆ
பட்டியல் வரையிடங்களுக்கும் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குமான நிருவாகம் மற்றும் கட்டாள்கை

4. பழங்குடியினர் ஆய்வுரை மன்றம் :

(1) பட்டியல் வரையிடங்களைக் கொண்ட மாநிலம் ஒவ்வொன்றிலும், குடியரசுத்தலைவர் பணிப்பாராயின், பட்டியலில் கண்ட பழங்குடியினரைக் கொண்ட, ஆனால், பட்டியல் வரையிடங்களைக் கொண்டிராத மாநிலம் எதிலும், இருபதுக்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பழங்குடியினர் ஆய்வுரை மன்றம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும்; அவர்களில் கூடுமான வரையில், நான்கில் மூன்று பகுதியினர் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் சார்பாற்றுநர்களாக இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக: மாநிலச் சட்டமன்றப் பேரவையில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் சார்பாற்றுநர்களின் எண்ணிக்கையானது, பழங்குடியினர் ஆய்வுரை மன்றத்தில் அத்தகைய சார்பாற்றுநர்களால் நிரப்பப்படவேண்டிய பதவியிடங்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருப்பின், எஞ்சியுள்ள பதவியிடங்கள், அந்தப் பழங்குடியினரின் பிற உறுப்பினர்களால் நிரப்பப்படுதல் வேண்டும்.

(2) மாநிலத்திலுள்ள பட்டியலில் கண்ட பழங்குடியினரது நலப்பாட்டையும் முன்னேற்றத்தையும் பொறுத்து ஆளுநரால் குறித்தனுப்பப்படும் பொருட்பாடுகளின்மீது ஆய்வுரை கூறுவது பழங்குடியினர் ஆய்வுரை மன்றத்தின் கடமை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/236&oldid=1467641" இலிருந்து மீள்விக்கப்பட்டது