பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211


(3) ஆளுநர் பின்வருவனவற்றை வகுத்துரைக்கும் அல்லது, நேர்வுக்கேற்ப, ஒழுங்குறுத்தும்விதிகளைச் செய்யலாம்:

(அ) மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களை அமர்த்தும் முறை; மேலும், மன்றத்தின் தலைவர், அதன் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை அமர்த்துதல்;

(ஆ) அதன் கூட்டங்களை நடத்துதல் மற்றும் அதன் பொதுவியலான நெறிமுறை; மற்றும்

(இ) பிற சார்வுறு பொருட்பாடுகள் அனைத்தும்.

5. பட்டியல் வரையிடங்களுக்குப் பொருந்துறும் சட்டம் :

(1) இந்த அரசமைப்பில் எது எவ்வாறிருப்பினும், ஆளுநர் பொது அறிவிக்கை வாயிலாக, நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்டமன்றத்தின் குறிப்பிட்ட சட்டம் எதுவும், மாநிலத்தில் ஒரு பட்டியல் வரையிடம் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறுதல் ஆகாது என்றோ, அவர் அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கும் விதிவிலக்குகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, அந்த மாநிலத்தில் ஒரு பட்டியல் வரையிடம் அல்லது அதன் பகுதி எதற்கும் பொருந்துறுதல் ஆகும் என்றோ பணிக்கலாம்; மேலும், இந்த உள்பத்தியின்படி இடப்படும் பணிப்புரை எதுவும் முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

(2) ஆளுநர் ஒரு மாநிலத்தில் அப்போதைக்கு ஒரு பட்டியல் வரையிடமாக இருக்கிற வரையிடம் எதனின் அமைதிக்காகவும் நல்லாட்சிக்காகவும் ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்கலாம்.

குறிப்பாகவும் மேலேகண்ட அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றியும், அத்தகைய ஒழுங்குறுத்தும்விதிகள்

(அ) அத்தகைய வரையிடத்தில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் உறுப்பினர்களால் அல்லது அவர்களிடையே நிலம் உரிமைமாற்றம் செய்யப்படுவதைத் தடைசெய்யலாம் அல்லது வரையறைப்படுத்தலாம்;

(ஆ) அத்தகைய வரையிடத்தில் பட்டியலில் கண்ட பழங்குடியினரின் உறுப்பினர்களுக்கு நிலத்தைப் பகிர்ந்தொதுக்குவதை ஒழுங்குறுத்தலாம்;

(இ) அத்தகைய வரையிடத்தில் பட்டியலில் கண்ட பழங்குடியினருக்குக் கடன் கொடுப்பவர்களாகத் தொழில் புரிபவர்களின் வட்டித் தொழிலை ஒழுங்குறுத்தலாம்.

(3) இந்தப் பத்தியின் (2) ஆம் உள்பத்தியில் குறிப்பிடப்படும் ஒழுங்குறுத்தும்விதி எதனையும் வகுக்குங்கால், தொடர்புடைய வரையிடத்திற்கு அப்போதைக்குப் பொருந்துறும் நாடாளுமன்றச் சட்டம் அல்லது மாநிலச் சட்டம் எதனையும் அல்லது நிலவுறும் சட்டம் எதனையும் ஆளுநர் நீக்கறவு செய்யலாம் அல்லது திருத்தம் செய்யலாம்.

(4) இந்தப் பத்தியின்படி வகுக்கப்படும் ஒழுங்குறுத்தும்விதிகள் அனைத்தும், குடியரசுத்தலைவருக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அவரால் ஏற்பிசைவளிக்கப்படும் வரையில், அவை செல்திறம் பெறுவதில்லை.

(5) ஆளுநர் ஒழுங்குறுத்தும்விதிகளை வகுக்குங்கால், மாநிலத்திற்காகப் பழங்குடியினர் ஆய்வுரை மன்றம் ஒன்று இருக்கும் நேர்வில், அத்தகைய மன்றத்தைக் கலந்தாய்வு செய்திருந்தாலன்றி, இந்தப் பத்தியின்படி ஒழுங்குறுத்தும்விதி எதுவும் வகுக்கப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/237&oldid=1467642" இலிருந்து மீள்விக்கப்பட்டது