பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212


பகுதி இ

பட்டியல் வரையிடங்கள்


6. பட்டியல் வரையிடங்கள் :

(1) இந்த அரசமைப்பில் “பட்டியல் வரையிடங்கள்” என்னும் சொற்றொடர், பட்டியல் வரையிடங்கள் எனக் குடியரசுத்தலைவர் ஆணையின்வழி விளம்பும் வரையிடங்கள் எனப் பொருள்படும்.

(2) குடியரசுத்தலைவர், ஆணையின்வழி, எந்தச் சமயத்திலும்—

(அ) ஒரு பட்டியல் வரையிடமாக உள்ளது முழுவதுமோ குறித்துரைக்கப்படும் அதன் பகுதி எதுவுமோ, அத்தகைய பட்டியல் வரையிடமாக அல்லது அதன் பகுதியாக இருப்பது அற்றுப்போதல் வேண்டும் என்று பணிக்கலாம்;

(அஅ) ஒரு மாநிலத்தில் உள்ள பட்டியல் வரையிடம் எதனின் பரப்பிடத்தையும், அந்த மாநிலத்தின் ஆளுநரைக் கலந்தாய்வு செய்த பின்பு விரிவுப்படுத்தாலம்; (ஆ) பட்டியல் வரையிடம் எதனையும், எல்லைகளைத் திருத்தமைவு செய்வதன் வாயிலாக மட்டுமே மாறுதல் செய்யலாம்;

(இ) ஒரு மாநிலத்தினுடைய எல்லைகளில் மாறுதல் எதுவும் செய்யும் போது அல்லது ஒரு புதிய மாநிலத்தை ஒன்றியத்திற்குள் சேர்த்துக் கொள்ளும்போது அல்லது நிறுவும்போது, மாநிலம் எதிலும் முன்னதாகவே உள்ளடங்கியிராத ஆட்சிநிலவரை எதனையும், ஒரு பட்டியல் வரையிடமாகவோ ஒரு பட்டியல் வரையிடத்தின் பகுதியாகவோ விளம்பலாம்;

(ஈ) மாநிலம் எதனின் அல்லது மாநிலங்கள் எவற்றின் தொடர்பாகவும், இந்தப் பத்தியின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும் அல்லது ஆணைகள் எவற்றையும் அழித்தறிவு செய்யலாம்; மேலும், தொடர்புடைய மாநில ஆளுநரைக் கலந்தாய்வு செய்து, பட்டியல் வரையிடங்களாக இருக்க வேண்டிய வரையிடங்களை மறுவரையறைசெய்யும் புதிய ஆணைகளைப் பிறப்பிக்கலாம்;

அத்தகைய ஆணை எதுவும், தேவையானவையாகவும் குடியரசுத்தலைவருக்குத் தோன்றும் சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் முறையானவையாகவும் கொண்டிருக்கலாம்; ஆனால், மேற்கூறப்பட்டவாறல்லாமல், இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை, பிந்திய ஆணை எதனாலும் மாறுதல் செய்யப்படுதல் ஆகாது.

பகுதி ஈ

இணைப்புப்பட்டியலின் திருத்தம்

7. இணைப்புப்பட்டியலின் திருத்தம் :

(1) நாடாளுமன்றம் அவ்வப்போது சட்டங்களினால் எதனையும் சேர்த்தல், மாறுதல்செய்தல் அல்லது நீக்கறவுசெய்தல் என்னும் வகையில் இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களில் எதனையும் திருத்தம் செய்யலாம்; மேலும், இந்த இணைப்புப்பட்டியல் அவ்வாறு திருத்தம் செய்யப்படும்போது, இந்த அரசமைப்பில் இந்த இணைப்புப்பட்டியல் பற்றிய சுட்டுகை எதுவும், அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட இணைப்புப்பட்டியல் பற்றிய சுட்டுகையாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியில் குறிப்பிடப்பட்ட சட்டம் எதுவும், 368ஆம் உறுப்பைப் பொறுத்து இந்த அரசமைப்பின் ஒரு திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/238&oldid=1467644" இலிருந்து மீள்விக்கப்பட்டது