பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


ஆறாம் இணைப்புப்பட்டியல்
[244 (2), 275 (1) ஆகிய உறுப்புகள்]
அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் வரையிடங்களின் நிருவாகம் குறித்த வகையங்கள்

1. தன்னாட்சி மாவட்டங்கள் மற்றும் தன்னாட்சி வட்டாரங்கள் :

(1) இந்தப் பத்தியின் வகையங்களுக்கு உட்பட்டு, இந்த இணைப்புப்பட்டியலின் 20 ஆம் பத்திக்குப் பிற்சேர்க்கையாயுள்ள அட்டவணையின் I, II, II அ, III ஆகிய பகுதிகளில் கண்டுள்ளவை ஒவ்வொன்றிலுமுள்ள பழங்குடியினர் வரையிடங்கள், ஒரு தன்னாட்சி மாவட்டமாக இருக்கும்.

(2) ஒரு தன்னாட்சி மாவட்டத்தில் வெவ்வேறு பட்டியல் பழங்குடியினர் இருப்பார்களாயின், ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக, அவர்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ள வரையிடத்தை அல்லது வரையிடங்களைத் தன்னாட்சி வட்டாரங்களாகப் பிரிக்கலாம் :

[1][வரம்புரையாக: இந்த உள்பத்தியில் அடங்கியுள்ள எதுவும், போடோலாந்து ஆட்சி நிலவரை வரையிடப்பகுதிகள் மாவட்டத்திற்குப் பொருந்தாது.]

(3) ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாக,

(அ) மேற்சொன்ன அட்டவணையின் பகுதிகளில் எதிலும் வரையிடம் எதனையும் சேர்க்கலாம்;

(ஆ) மேற்சொன்ன அட்டவணையின் பகுதிகளில் எதிலுமிருந்து வரையிடம் எதனையும் நீக்கலாம்;

(இ) ஒரு புதிய தன்னாட்சி மாவட்டத்தை உருவாக்கலாம்;

(ஈ) தன்னாட்சி மாவட்டம் எதனின் வரையிடத்தையும் விரிவுபடுத்தலாம்;

(உ) தன்னாட்சி மாவட்டம் எதனின் பரப்பிடத்தையும் குறைக்கலாம்;

(ஊ) இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட தன்னாட்சி மாவட்டங்களை அல்லது அவற்றின் பகுதிகளை ஒரே தன்னாட்சி மாவட்டமாக அமையுமாறு இணைக்கலாம்;

(ஊஊ) தன்னாட்சி மாவட்டம் எதனின் பெயரையும் மாற்றலாம்;

(எ) தன்னாட்சி மாவட்டம் எதனின் எல்லைகளையும் வரையறுக்கலாம்:

வரம்புரையாக: இந்த இணைப்புப்பட்டியலின் 14ஆம் பத்தியின் (1)ஆம் உள்பத்தியின்படி அமர்த்தப்பட்ட ஆணையம் ஒன்றின் அறிக்கையை ஓர்வு செய்த பின்பல்லாமல், இந்த உள்பத்தியின் (இ), (ஈ), (உ), (ஊ) ஆகிய கூறுகளின்படி, ஆளுநர் ஆணை எதனையும் பிறப்பித்தல் ஆகாது,

மேலும் வரம்புரையாக: இந்த உள்பத்தியின்படி ஆளுநர் பிறப்பித்த ஆணை எதுவும், அந்த ஆணையின் வகையங்களைச் செல்திறப்படுத்துவதற்குத் தேவையென ஆளுநருக்குத் தோன்றுகிற (20 ஆம் பத்தியின், மற்றும் மேற்சொன்ன அட்டவணையின் பகுதிகளில் எதிலும் உள்ள இனம் எதனின் திருத்தம் உள்ளடங்கலாக) சார்வுறு மற்றும் விளைவுறு வகையங்களைக் கொண்டிருக்கலாம்.

2. மாவட்ட மன்றங்களையும் வட்டார மன்றங்களையும் அமைத்தல் :

(1) தன்னாட்சி மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் முப்பதுக்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாவட்ட மன்றம் இருக்கும்; அந்த உறுப்பினர்களில் நால்வருக்கு மேற்படாதவர்கள் ஆளுநரால் நியமிக்கப்பெறுவர்; எஞ்சிய உறுப்பினர்கள், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பெறுவர்:

  1. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு ஆறாம் இணைப்புப்பட்டியல் (திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/239&oldid=1467645" இலிருந்து மீள்விக்கப்பட்டது