பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


[1][வரம்புரையாக: போடோலாந்து ஆட்சிநிலவரை வரையிடமன்றமானது நாற்பத்தாறுக்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் நாற்பது உறுப்பினர்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பெறுவர், அவர்களில் முப்பது, பட்டியல் பழங்குடியினருக்காகவும் ஐந்து, பழங்குடியினத்தவர் அல்லாதவருக்காகவும் ஒதுக்கப்படும், ஐந்து அனைத்து இனத்தினருக்கும் உரியதாகும் மற்றும் எஞ்சியுள்ள ஆறு உறுப்பினர்கள் போடோலாந்து ஆட்சிநிலவரை வரையிடப்பகுதிகள், மாவட்டத்தில் சார்பாற்றம் செய்யப்படாத இனத்தவர்களுக்கிடையேயிருந்து வாக்களிக்கும் உரிமைகள் உள்ளடங்கலாக, பிற உறுப்பினர்களைப் போன்றே அதே உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் கொண்டவர்களாக ஆளுநரால் நியமிக்கப்படுவர். அவர்களில் குறைந்தது இருவர், பெண்களாக இருத்தல் வேண்டும்.]

(2) இந்த இணைப்புப்பட்டியலின் 1ஆம் பத்தியின் (2)ஆம் உள்பத்தியின்படி ஒரு தன்னாட்சி வட்டாரமாக அமைக்கப்பட்ட வரையிடம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே ஒரு வட்டார மன்றம் இருக்கும்.

(3) மாவட்ட மன்றம் ஒவ்வொன்றும், வட்டார மன்றம் ஒவ்வொன்றும் முறையே, "(மாவட்டத்தின் பெயர்) மாவட்ட மன்றம்”, “(வட்டாரத்தின் பெயர்) வட்டார மன்றம்" என்னும் பெயரில் ஒரு கூட்டுருமமாக இருக்கும்; அது தொடர்ந்த நிலைப்பாட்டையும் ஒரு தனியுறு இலட்சினையையும் கொண்டிருக்கும்; மேற்சொன்ன பெயரால் அது வழக்கிடுதலும் அதன்மீது வழக்கிடப்படுதலும் ஆகும்.

[1][வரம்புரையாக: வடக்கு கச்சார் குன்றுகள் மாவட்டத்திற்காக அமைக்கப்பட்ட மாவட்ட மன்றம், வடக்கு கச்சார் குன்றுகள் தன்னாட்சி மன்றம் என்று அழைக்கப்பெறும் மற்றும் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திற்காக அமைக்கப்பட்ட மாவட்ட மன்றம், கர்பி ஆங்கலாங்கு தன்னாட்சி மன்றம் என்று அழைக்கப்பெறும்.] [2][மேலும் வரம்புரையாக: போடோலாந்து ஆட்சிநிலவரை வரையிடப்பகுதிகள் மாவட்டத்திற்காக அமைக்கப்பட்ட மாவட்ட மன்றம், போடோலாந்து ஆட்சிநிலவரை மன்றம் என்று அழைக்கப்பெறும்.]

(4) இந்த இணைப்புப்பட்டியலின் வகையங்களுக்கு உட்பட்டு, ஒரு தன்னாட்சி மாவட்டத்தின் நிருவாகம், அத்தகைய மாவட்டத்திற்குள் உள்ள வட்டாரமன்றம் எதனிடமும் இந்த இணைப்புப்பட்டியலின்படி உற்றமையாதிருக்கிற அளவுக்கு, அத்தகைய மாவட்டத்திற்கான மாவட்ட மன்றத்திடம் உற்றமைந்திருக்கும்; மேலும், ஒரு தன்னாட்சி வட்டாரத்தின் நிருவாகம், அத்தகைய வட்டாரத்திற்கான வட்டார மன்றத்திடம் உற்றமைந்திருக்கும்.

(5) வட்டார மன்றங்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி மாவட்டத்தில், மாவட்ட மன்றத்திற்கு, அந்த வட்டார மன்றத்தின் அதிகாரத்தின் கீழுள்ள வரையிடங்களைப் பொறுத்தவரை, இந்த இணைப்புப்பட்டியலின் வழி வழங்கப்படும் அதிகாரங்களோடுங்கூட, அத்தகைய வரையிடங்களுக்காக அந்த வட்டார மன்றத்தினால் அதனிடம் ஒப்படைவு செய்யப்படும் அதிகாரங்களை மட்டுமே அந்த மாவட்ட மன்றம் உடையது ஆகும்.

(6) ஆளுநர், தன்னாட்சி மாவட்டங்களிலோ வட்டாரங்களிலோ நிலவுறும் பழங்குடியினர் மன்றங்களை அல்லது சார்பாற்றம் வாய்ந்த பிற பழங்குடியினர் அமைவனங்களைக் கலந்தாய்வு செய்து, மாவட்ட மன்றங்களையும் வட்டார மன்றங்களையும் முதல் முறையாக அமைப்பதற்கு விதிகளை செய்வார்; அத்தகைய விதிகளில் பின்வருவனவற்றிற்கு வகைசெய்யப்படும்:

(அ) மாவட்ட மன்றங்கள், வட்டார மன்றங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் அவற்றில் பதவியிடங்களைப் பகிர்ந்தொதுக்குதல்;
(ஆ) அந்த மன்றங்களுக்கான தேர்தல்களுக்காக நிலவரைத் தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல்;


  1. 1.0 1.1 2003 ஆம் ஆண்டு அரசமைப்பு ஆறாம் இணைப்புப்பட்டியல் (திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது.
  2. 1995ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியல் (திருத்தம்) சட்டத்தால் (42/1995) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/240&oldid=1467215" இலிருந்து மீள்விக்கப்பட்டது